

ஜம்மு-காஷ்மீரில் கத்துவா மாவட்டத்தில் தீவிரவாதிகள் ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டது. கடந்த ஒரு வாரத்தில் 5-வது முறையாக தீவிரவாதிகள் ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவர் கூறும்போது, "எல்லையில் கத்துவா மாவட்டத்தில் சில்யாரி - கோரா பகுதியில் ஊடுருவ தீவிரவாதிகள் தயார் நிலையில் இருப்பது தெரிந்தது. இதனையடுத்து எல்லை பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இதனை தாக்குப்பிடிக்க முடியாமல் தீவிரவாதிகள் ஊடுருவல் முயற்சியை கைவிட்டனர். கடந்த ஒரு வாரத்தில் 5-வது முறையாக தீவிரவாதிகள் ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.
காஷ்மீரில் நிலவும் கடும் பனியை பயன்படுத்தி தீவிரவாதிகள் ஊடுருவல் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தியப் படைகளின் கவனத்தை திசைதிருப்பும் வகையில் எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தி பாகிஸ்தான் ராணுவமும் தீவிரவாதிகளுக்கு உதவி வருகிறது" என்றார்.
முன்னதாக நேற்று, எல்லை பாதுகாப்பு இயக்குநர் டி.கே.பதக் சம்பா, கத்துவா மாவட்டங்களில் எல்லைப் பகுதிகளில் கள நிலவரத்தை நேரில் கண்டறிந்தார்.