

நம் பழங்கால அறிவியல் பெருமைகள், சாதனைகள் போன்றவை குறித்து நாம் வெட்கப்படக்கூடாது என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் கூறியுள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு இந்திய அறிவியல் மாநாடு மும்பையில் நடந்தது. அப்போது அங்கு சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளில் ஒன்று, சுமார் 7 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் விமானங்கள் இருந்ததாகக் கூறியிருந்தது. இது குறித்து பல்வேறு தளங்களில் சர்ச்சைகள் எழுந்தன. இந்நிலையில் அந்தக் கட்டுரைக்கு ஆதரவாக அமைச்சர் ஹர்ஷ வர்தன் பேசியதாவது:
அந்தக் கட்டுரைக்கு எதிராக சில செய்தித்தாள்களில் பல கட்டுரைகள் வெளியாயின. இவற்றின் மூலம் மக்களிடம் என்ன வகையான எண்ணம் ஏற்படும். அதாவது, அறிவியல் மாநாட்டில் அறிவியலின் வரலாற்றை மட்டும்தான் அவர்கள் விவாதிக்கிறார்கள் என்று கருதுவார்கள். நம்முடைய பழங்கால அறிவியல் பெருமைகள் குறித்து நாம் வெட்கப்படக்கூடாது. இந்தக் கருத்துகள் எல்லாம் பல வெளிநாடுகளில் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. நம்முடைய வேதங்களிலும் கூறப்பட்டுள்ளன. நாம் பல துறைகளிலும் அறிவு பெற்றிருந்ததற்குச் சாட்சியங்கள் உள்ளன.
அறிவியல் துறையில் மட்டு மல்லாது, மருத்துவம், கலை, கலாச்சாரம், வணிகம் மற்றும் இன்னும் பல துறைகளிலும் நாம் முதன்மையானவர்களாக இருந்தோம். எனவே, இதுபோன்ற கட்டுரைகள் எல்லாம் இந்த மாநாடுகளில் சமர்ப்பிக்கப்படும் போது, பழங்கால விஷயங்களை இன்றைய நவீன விஷயங்களுடன் பொருத்தும்போது ஏற்படக் கூடிய விமர்சனங்களை எல்லாம் நாம் கண்டுகொள்ளக் கூடாது.
எல்லாவற்றிற்கும் மேலாக, நமது அரசும் நமது விஞ்ஞானிகளும் மேம்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வருகிறார்கள். பிரதமர் நரேந்திர மோடியின் 'டிஜிட்டல் இந்தியா' திட்டத்தின் கீழ் விரைவில் இந்தியா டிஜிட்டல் மயமாகும், என்றார்.