

புதுடெல்லி: சட்டவிரோதமாக அமெரிக்கா செல்ல முயன்ற 3 இந்தியர்கள் எத்தியோப்பியாவில் கடத்தப்பட்டுள்ளனர். அவர்களை விடுவிக்க ரூ.1 கோடி கேட்டு மிரட்டல் வந்துள்ளது.
குஜராத்தைச் சேர்ந்த ரித்விக் ஜன்சாரி, மம்தா சாவ்டா, மயூரி ஆகிய மூவரும் உறவினர்கள். மம்தாவின் கணவர் சிராக் குமார் 6 மாதங்களுக்கு முன்பு மாணவர் விசாவில் அமெரிக்கா சென்றுவிட்டார். ஆனால் மம்தாவுக்கு அமெரிக்க விசா கிடைக்கவில்லை. அதையடுத்து மம்தாவின் குடும்பத்தினர் இடைத்தரகர்கள் மூலம் சட்டவிரோத வழியில் அவர்களை அனுப்ப ஏற்பாடு செய்தனர்.
மெஹ்சானாவைச் சேர்ந்த ஏஜெண்ட் அல்பேஷ் பஞ்சால், வதோதரா ஏஜெண்ட் ஆகியோர் இந்தப் பயணத்தை ஏற்பாடு செய்தனர். ஒருவருக்கு ரூ.75 லட்சம் எனப் பேசப்பட்டது. அதில் ரூ.70 லட்சம் வரை செலுத்தப்பட்டதாகக் குடும்பத்தினர் கூறுகின்றனர். செப்டம்பர் 20-ம் தேதி மூவரும் குஜராத்தில் இருந்து புறப்பட்டனர்.
ராஜஸ்தான் வழியாக ஜெய்ப்பூர் சென்று, அங்கிருந்து எட்டிஹாட் விமானத்தில் அபுதாபி சென்று, பின்னர் எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபாவை அடைந்தனர். அங்கு ஒரு முகாமில் தங்கியிருந்தனர். அவர்களிடம் செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 19 வரை செல்லுபடியாகும் இ-விசா இருந்தது.
செப்டம்பர் 22-ம் தேதி, கனடா சென்று விட்டதாக மம்தா தன் தந்தையிடம் தொலைபேசியில் கூறினார். அதன்பிறகு அவர்களிடம் பேச முடியவில்லை.
இந்நிலையில் `கான்' என்பவர் குடும்பத்தினரை அழைத்து, மூவரையும் பிணைக் கைதிகளாக வைத்திருப்பதாகவும், விடுவிக்க ரூ.1 கோடி வேண்டும் என்றும் மிரட்டி உள்ளார். கடத்தல்காரர்களுக்கு ஏற்கெனவே ரூ.60 லட்சம் கொடுக்கப்பட்ட பின்னரும் இன்னும் ரூ.1 கோடி கேட்டு மிரட்டுவதாகக் குடும்பத்தினரும் ஏஜெண்டும் கூறுகின்றனர்.
அரசுக்கு கோரிக்கை
"எங்களிடம் பணம் இல்லை. எங்கள் பிள்ளைகளைப் பத்திரமாக மீட்டுத் தர வேண்டும்" என்று மம்தாவின் தந்தை கிரீட்பாய் சவுகான் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். மம்தாவின் தந்தை, காணாமல் போனோர் குறித்து லாங்க்னாஜ் காவல் நிலையத்தில் செப்டம்பர் 29-ம் தேதியன்று புகார் ஒன்றைப் பதிவு செய்தார். மூவரின் இருப்பிடம் இன்னும் தெரியவில்லை என்றும், விசாரணை நடந்து வருவதாகவும் காவல் ஆய்வாளர் ஏ.எம். கெலாட் தெரிவித்தார்.