

புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஹரி சங்கர் பிரம்மா நேற்று பதவியேற்றார்.
தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்த வி.எஸ்.சம்பத் பதவிக்காலம் நேற்று முன்தினம் முடிந்தது. இதைத் தொடர்ந்து நாட்டின் 19-வது தலைமை தேர்தல் ஆணையராக பிரம்மா பதவியேற்றார்.
பதவியேற்ற பிறகு அவர் நிருபர்களிடம் கூறும்போது, “டெல்லி சட்டப்பேரவை தேர்தல் சுதந்திரமாகவும் நேர்மையாகவும் நடைபெற அனைத்து நடவடிக்கைகளும் எடுப்பேன். இதுவே எனது முன்னுரிமை மற்றும் தலையாய பணியாக இருக்கும். டெல்லி தேர்தலில் எங்களின் செயல்பாடுகளை உலகமே உன்னிப்பாக கவனிக்கிறது” என்றார்.
பிரம்மா மேலும் கூறும்போது, “மிகச் சிறந்த செயல்பாடே தேர்தல் ஆணையத்தின் நீண்ட கால இலக்காக இருக்கும். நமது செயல்பாடுகள் ஒவ்வொன்றும் செவ்வனே செய்துமுடிக்கப்படவேண்டும். அதற்கான எல்லா முயற்சிகளும் மேற்கொள்ளவேண்டும்.
தேர்தலை மிகவும் தரத்துடன் நடத்திமுடிக்க நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதில் நான் அதிக கவனம் செலுத்துவேன்.
தேசிய வாக்காளர் தினமான ஜனவரி 25-ம் தேதி தேசிய அளவில் மின்னணு வாக்காளர் பட்டியல் மேலாண்மை திட்டம் தொடங்கி வைக்கப்படும்.
இதன் மூலம் நாடு முழுவது மான வாக்காளர் பட்டியலை பார்க்கலாம். வாக்காளர்கள் தங்கள் பெயர் உள்ளிட்ட விவரங்களை சரிபார்த்துக் கொள்ள முடியும்.
உச்சநீதிமன்ற உத்தரவின்படி வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை வழங்குவதற்கான அடிப்படை பணிகள் குறித்து தேர்தல் ஆணையம் திட்டமிடும்” என்றார் பிரம்மா.
பிரம்மா (64) அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர். ஆந்திரப்பிரதேச 1975-ம் ஆண்டு ஐஏஎஸ் தொகுப்பில் உள்ளார். பிரம்மாவுக்கு வரும் ஏப்ரல் 19-ம் தேதி 65 வயது பூர்த்தியாகிறது.
அரசியலைப்புச் சட்டப்படி தலைமை தேர்தல் ஆணையருக்கான அதிகபட்ச வயதுவரம்பு இதுவாகும். எனவே சுமார் 3 மாதங்களுக்கு மட்டுமே பிரம்மா இந்தப் பதவியில் இருப்பார்.
பிரம்மா, 2010-ம் ஆண்டு ஆகஸ்ட் 25-ம் தேதி தேர்தல் ஆணையராக பதவியேற்றார். இப்பதவியில் சேரும் முன் மத்திய எரிசக்தித் துறை செயலாளராக இருந்தார்.
ஜே.எம்.லிங்டோவுக்குப் பிறகு வடகிழக்கு மாநிலத்தி லிருந்து இந்தப் பதவிக்கு வரும் 2-வது அதிகாரி இவர்.
3 உறுப்பினர்களை கொண்ட தேர்தல் ஆணையத்தில் தற்போது ஓரிடம் காலியாக உள்ளது. இதை நிரப்புவதற்கான நடைமுறை களை மத்திய அரசு விரைவில் தொடங்கவுள்ளது.