Published : 02 Jan 2015 12:32 pm

Updated : 02 Jan 2015 12:32 pm

 

Published : 02 Jan 2015 12:32 PM
Last Updated : 02 Jan 2015 12:32 PM

அசுர வேகத்தில் முடிவெடுக்கும் விக்ரம்

படைப்பாளிகள் நம்பும் ஒளிப்பதிவாளர் என்ற அடையாளத்தோடு வளைய வருபவர் விஜய் மில்டன். ஏற்கெனவே ஒரு படத்தை இயக்கியிருந்தாலும், இரண்டாவதாக இவர் ஒளிப்பதிவு செய்து இயக்கிய 'கோலி சோடா' வசூல், விமர்சனம் இரண்டிலும் அருமை என்று சொல்ல வைத்தது. தற்போது விக்ரம் நடிக்கும் ’ 10 எண்றதுக்குள்ள’ படத்தை இயக்கிவரும் அவரைச் சந்தித்தபோது....

கோலிசோடாவின் உண்மையான பட்ஜெட் மற்றும் வசூல் என்ன?

ஒருகோடியில் எடுத்து முடித்தேன். அனைத்து வருமானங்களையும் சேர்த்து 15 கோடி ஈட்டியதாகச் சொல்கிறார்கள்.

கோலிசோடாவில் ’வளரிளம் பருவச் சிறுவர் சிறுமியரை வைத்து ஹீரோயிசம் மிகுந்த இறுதிக்காட்சி அமைத்ததற்குக் கண்டங்கள் வந்ததா இல்லையா?

கண்டிப்பாக இல்லை. நான் எங்கே தப்பித்தேன் என்றால் நீங்கள் கூறியதைப் போலப் பெரிய மனிதர்கள் ஆவதற்கும் பதின் பருவத்துக்கும் இடைப்பட்ட வயது கொண்டவர்களாக எனது கதாபாத்திரங்களைச் சித்தரித்தேன். இந்த வயது நல்லது எது கெட்டது எது என்று பிரித்துப் பார்க்கத் தெரிந்த வயதுதான். அவர்களைத் தங்கள் சொந்தக்காலில் நிற்கத்தெரிந்தவர்களாக, தங்களுக்கான அடையாளத்தைத் தேடும் தன்னம்பிக்கை கொண்டவர்களாகச் சித்தரித்தேன்.

அதேபோலப் பெரிய ஹீரோக்களுக்கான ஹீரோயிசத்தை அவர்களுக்கு வைத்தபோது அவர்கள் கையில் துண்டைத் தவிர, வேறு கத்தியையோ கட்டையையோ நான் கொடுக்கவில்லை. அதனால் விமர்சகர்களின் கண்டனத்திலிருந்து தப்பித்தேன். என்றாலும் தேசியவிருது போட்டியில் முதல் சுற்றோடு எனது படம் வெளியேற வேண்டியிருந்ததை நடுவர்கள் அனைவரும் வருத்தத்தோடு தெரிவித்ததை நான் மனதில் இருத்திக் கொண்டேன்.

பரபரப்பான கோயம்பேடு சந்தையில் எப்படிப் படம்பிடிக்க முடிந்தது?

நான் ஒரு ஒளிப்பதிவாளராக இருந்ததுதான் காரணம். ஐந்து 5டி கேமராக்களை வெவ்வேறு இடங்களில் வைத்து ஒரே காட்சியை படமாக்கினேன். சந்தைக்கு வந்துபோகும் பொதுமக்களே அதில் பதிவாகியிருந்தார்கள். ஒரு ஷாட்டில் இருக்கும் கதாபாத்திரம் அல்லாத மக்கள் அடுத்த ஷாட்டில் இருக்க மாட்டார்கள். இதனால் கன்டியூனிட்டி பிரச்சினை இருந்தது. ஆனால் கதை ஓட்டத்தில் ரசிகர்கள் அதைக் கண்டுகொள்ளவில்லை.

மறக்க முடியாத பாராட்டு..?

ரஜினி, விஜய், விக்ரம் போன் செய்தது மறக்க முடியாதது. 1500 உதவி இயக்குநர்கள் குறுஞ்செய்தி வழியாகப் பாராட்டினார்கள். அதையும் மறக்க முடியாது.

உங்கள் நட்பு வட்டத்திலேயே இல்லாத விக்ரம் நடிக்கும் படத்தை இயக்குகிறீர்களே?

ஆமாம். விக்ரம், சத்யம் திரையரங்கில் ‘கோலிசோடா’ படத்தைப் பார்த்திருக்கிறார். உயர்தட்டு ரசிகர்கள் அதிகம் கூடும் அந்தத் திரையரங்கில் அவர்கள் இருக்கையை விட்டு எழுந்து, குதித்து ரசித்துப் படத்தை ரசித்ததைக் கண்டவர், படம் முடிந்ததும் எனக்குப் போன் செய்து பேசினார். எனக்குக் கதை இருக்கா என்றார்.

‘சார் ஐந்து வருடங்களாக உங்களுக்கான கதையுடன் உங்களைச் சந்திக்க முடியாமல் அலைகிறேன்’ என்றேன். உடனே அவரது பெசன்ட் நகர் வீட்டுக்கு வரச்சொன்னவர், இரவு ஒருமணி வரை கதைகேட்டு உடனே ஓகே செய்தார். சமந்தா நாயகி விக்ரமின் நண்பராக ‘முண்டாசுப்பட்டி' முனிஷ் நடிக்கிறார்கள். 90 விழுக்காடு படம் முடிந்துவிட்டது. லாரி டிரைவராக நடிக்கிறார் விக்ரம்.

‘10 எண்றதுக்குள்ள’ என்ன கதை?

வாழ்க்கையில் சில நேரங்கள் ஒவ்வொருவருக்குமே க்ளைமாக்ஸ் தருணங்களாக கடந்துபோகும். அப்போது ஒவ்வொரு நொடியையுமே நாம் எண்ண ஆரம்பித்துவிடுவோம். அப்படியொரு தருணம் நமது நாயகனுக்கும் வருகிறது. அதை அவர் எப்படி எதிர்கொள்கிறார் என்பதுதான் கதை. 120 கிலோ மீட்டர் வேகத்தில் லாரி ஓட்டும் நாயகனுக்கு, நெடுஞ்சாலையில் பத்து கிலோமீட்டருக்கு அப்பால் வரும் வாகனம் பத்து எண்ணு வதற்குள் அருகில் வந்துவிடும்.

அவ்வளவு தூரத்தில் வரும் அது காரா, லாரியா என்று அசுர வேகத்தில் முடிவெடுக்க வேண்டும். இதற்கு அனுபவம் தேவை. வாழ்க்கையில் பலநேரங்களில் முடிவெடுக்க அனுபவம் முக்கியம் என்பதை அலட்டல் இல்லாமல் சொல்லும் ரோட் மூவி வகை இது.

சந்திப்புவிஜய் மில்டன்தமிழ் சினிமாகோலி சோடா படம்.

You May Like

More From This Category

flies

பேசும் பழ ஈக்கள்!

இணைப்பிதழ்கள்

More From this Author