

சுனந்தா புஷ்கர் கொலை வழக்கை விசாரித்து வரும் டெல்லி போலீஸின் சிறப்பு புலனாய்வுக் குழுவினர் நேற்று அமர்சிங்கிடம் 2 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து அமர்சிங் கூறும்போது, “என்னுடைய நெருங்கிய தோழியான சுனந்தா மரணம் தொடர்பாக டெல்லி போலீஸார் என்னிடம் பல்வேறு கேள்விகளை கேட்டனர். இது தொடர்பாக எனக்குத் தெரிந்த விவரங்களை விசாரணையின் போது தெரிவித்துள்ளேன்” என்றார்.
விசாரணையின்போது சுமார் 20 கேள்விகள் கேட்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் இதுதொடர் பான விவரத்தை தெரிவிக்க அமர்சிங் மறுத்துவிட்டார்.
இதுகுறித்து டெல்லி காவல் துறை ஆணையர் பி.எஸ்.பஸ்ஸி கூறும்போது, “அமர்சிங் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் சுனந்தா தொடர்பாக சில தகவல்களை கூறியிருந்தார். அதை உறுதிப்படுத்துவதற்காக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது” என்றார்.
சுனந்தா புஷ்கர் (51) கடந்த ஆண்டு டெல்லி நட்சத்திர ஓட்டலில் இறந்து கிடந்தார். இது இயற்கை மரணம் என கூறிவந்த நிலையில், டெல்லி போலீஸார் சில வாரங்களுக்கு முன்பு கொலை வழக்காக பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், சமாஜ்வாதி கட்சியிலிருந்து வெளியேறிய அமர் சிங் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “சுனந்தா இறப்பதற்கு 2 தினங்களுக்கு முன்பு ஒரு ஓட்டலில் அவரை சந்தித்துப் பேசினேன். அப்போது அவரது கணவர் சசிதரூரும் இருந்தார். ஐபிஎல் கிரிக்கெட் (கொச்சி டஸ்கர்ஸ்) விவகாரத்தில் எனக்கு எவ்வித தொடர்பும் இல்லை. சசி தரூர் மீது அன்பு செலுத்தியதற்காக அவர் செய்த தவறுக்காக என்னை பலிகடா ஆக்கி விட்டார் என்று கூறி சுனந்தா அழுதார். இதுகுறித்த உண்மையை வெளிப்படுத்தப் போகிறேன் என்று அவர் கூறினார்” என்றார்.
கடந்த 2010-ல் ஐபிஎல் கிரிக்கெட் டில் கொச்சி டஸ்கர்ஸ் அணியின் ரூ.70 கோடி மதிப்பிலான பங்குகள் சுனந்தாவுக்கு (திருமணத்துக்கு முன்பே) பரிசாக வழங்கப்பட்டது. சசிதரூர் சார்பாகவே இந்த பரிசு வழங்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதனால் சசிதரூர் அமைச்சர் பதவியை இழந்தார்.
இதன் அடிப்படையிலேயே அமர்சிங்கிடம் விசாரணை நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. இந்த வழக்கு தொடர்பாக கடந்த 19-ம் தேதி சசிதரூரிடமும் விசாரணை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.