தங்க மீன்கள், தலைமுறைகள் படத்துக்கு விருது: சிறந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமார்

தங்க மீன்கள், தலைமுறைகள் படத்துக்கு விருது: சிறந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமார்
Updated on
2 min read

தங்க மீன்கள் திரைப்படத்துக்கு 3 பிரிவுகளில் தேசிய விருது கிடைத்துள்ளது.

தங்க மீன்கள் படத்தில் இடம்பெற்ற ‘ஆனந்த யாழை மீட்டுகிறாய்…' பாடலுக்காக, சிறந்த பாடலாசிரியருக்கான விருதுக்கு நா.முத்துக்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மாநில மொழி திரைப்படங்கள் பிரிவில், சிறந்த தமிழ்ப் படமாகவும் தங்க மீன்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கான விருதை அத்திரைப்பட இயக்குநர் ராம் பெறுவார். அந்தத் திரைப்படத்தில் நடித்த சாதனாவுக்கு சிறந்த குழந்தை நட்சத்திரம் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய ஒருமைப்பாட்டுக்கான பிரிவில், சிறந்த படமாக மறைந்த இயக்குநர் பாலு மகேந்திராவின் ‘தலைமுறைகள்' தேர்வு செய்யப்பட்டு, நர்கீஸ் தத் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

மற்றொரு தமிழ்ப் படமான ‘வல்லினம்' சிறந்த எடிட்டிங் பிரிவில் சாபு ஜோசப்-புக்கு தேசிய விருதைப் பெற்றுத்தந்துள்ளது.

61-வது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதில் ஆனந்த் காந்தியின் ‘ஷிப் ஆப் தீசிஸ்’ படத்துக்கு சிறந்த திரைப்படத்துக்கான தேசிய விருது கிடைத்துள்ளது.

ஓட்டப்பந்தய வீரர் மில்கா சிங்கின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட ‘பாஹ் மில்கா பாஹ்’ ஹிந்தி திரைப்படம் சிறந்த பொழுதுபோக்கு திரைப்படத்துக்கான விருதை பெற்றுள்ளது. சிறந்த புதுமுக இயக்குநருக்கான இந்திரா காந்தி விருது, ‘ஃபாண்ட்ரி’ (மராத்தி) திரைப்படத்துக்காக நாகராஜ் மஞ்சூலிக்கு வழங்கப்படுகிறது.

சிறந்த குழந்தைகள் படம் - ‘காபல்’ (ஹிந்தி), சிறந்த இயக்குநர் - ஹன்ஷல் மேத்தா (படம்- ஷாஹித், மொழி - ஹிந்தி) சிறந்த நடிகர் - ராஜ்குமார் (ஷாஹித் - ஹிந்தி) மற்றும் சூரஜ் வெஞ்சராமூடு (பேரறியாதவர் - மலையாளம்) சிறந்த நடிகை - கீதாஞ்சலி தாபா (படம் - லயர்ஸ் டைஸ் - ஹிந்தி) சிறந்த துணை நடிகர்: செளரப் சுக்லா (ஜாலி எல்.எல்.பி - ஹிந்தி), சிறந்த துணை நடிகை: அமிருதா சுபாஷ் (அஸ்து - மராத்தி) மற்றும் ஆயிடா எல்-காஷெஃப் (ஷிப் ஆஃப் தீசிஸ்- ஆங்கிலம், ஹிந்தி), சிறந்த குழந்தை நட்சத்திரம்: சோம்நாத் அவ்காடே (ஃபாண்ட்ரி - மராத்தி) மற்றும் சாதனா (தங்கமீன்கள் - தமிழ்), சிறந்த பின்னணி பாடகர் ரூபன்கர் (படம் - ஜாதிஸ்வர் - பெங்காலி), சிறந்த பின்னணி பாடகி பெலா ஷிண்டே (படம்: துஹ்யா தர்மா கோச்சா - மராத்தி), சிறந்த ஒளிப்பதிவு ராஜீவ் ரவி (லயர்ஸ் டைஸ் - ஹிந்தி), சிறந்த திரைக்கதை (அசல்) - ஷேசாத்திரி ( படம் - டிசம்பர் 1 - கன்னடம்), சிறந்த திரைக்கதை (தழுவல்) - பஞ்சாக்‌ஷரி (படம் - பராக்ருதி - கன்னடம்) சிறந்த திரைக்கதை (வசனம்) சுமித்ரா பாவே (படம் - அஸ்து - மராத்தி),

மே 3-ம் தேதி தில்லியில் நடைபெறும் விழாவில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தேசிய திரைப்பட விருதுகளை வழங்குவார் என்று தெரிகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in