Published : 03 Jan 2015 06:48 PM
Last Updated : 03 Jan 2015 06:48 PM

வெடிபொருட்களுடன் ஊடுருவிய படகில் பெயர் இல்லை: இந்தியக் கடலோரக் காவற்படை

டிசம்பர் 31, 2014-ல் குஜராத் கடல் எல்லையில் வெடிபொருட்களுடன் பாக். மீன்பிடிப் படகு ஊடுருவியது பற்றி பாகிஸ்தான் வெளியிட்டுள்ள மறுப்பை இந்திய கடலோரக் காவற்படை நிராகரித்துள்ளது.

இந்தியக் கடலோரக் காவற்படையினர் அந்த மீன்பிடிப் படகை துரத்திப் பிடித்து நிறுத்தியதையடுத்து அதில் இருந்த ஊழியர்கள் 4 பேரில் ஒருவர் படகுக்கு தீ வைத்தார். இதனால் வெடித்து எரிந்த படகு கடலில் மூழ்கியது.

அதன் பாகங்களையும், ஊழியர்களின் உடல் ஏதாவது கிடைக்கிறதா என்று தேடுதல் மேற்கொண்டு வந்த போதும் இதுவரை எந்தவிதமான துப்பும் கிடைக்கவில்லை என்று கடலோரக் காவற்படை கூறியுள்ளது.

இது குறித்து கடலோர காவற்படையின் ஐ.ஜி. குல்தீப் சிங் ஷியோரன் தி இந்து (ஆங்கிலம்)-விடம் தெரிவித்த போது, “தேடுதல் தொடர்கிறது. அந்தப் படகில் எந்த ஒரு பெயரும் இல்லை. உடல்களையும் தேடி வருகிறோம். பாகிஸ்தான் தொடர்ந்து மறுத்து வருவதை நாங்கள் நிராகரிக்கிறோம். எங்களுக்கு உளவுத்துறை தகவல்கள் கிடைத்ததையடுத்து அந்தப் படகைப் பிடித்தோம்” என்றார்.

அந்தப் படகில் வந்தவர்கள் மீனவர்கள் போல் தெரியவில்லை, அவர்களிடம் மீன்பிடி வலை எதுவும் இல்லை எனவே சந்தேகம் வலுத்ததாக ஐ.ஜி மேலும் தெரிவித்தார்.தாங்கள் அந்தப் படகைப் பிடிக்க முறையான, வழக்கமான நடைமுறையையே மேற்கொண்டோம் என்று கடலோரம் காவற்படை கூறியுள்ளது.

குல்தீப் சிங் ஷியோரன் மேலும் கூறியதாவது: அந்தப் படகில் 4 பேர் இருந்தனர். அவர்களைப் பார்த்தால் மீனவர்கள் போல் தெரியவில்லை. அவர்கள் அரைக்கால் சட்டையும், டி-சர்ட்டும் அணிந்திருந்தனர். இதுதான் எங்களுக்கு சந்தேகத்தை எழுப்பியது.

இது குறித்து உளவுத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், வந்தது பயங்கரவாதிகளா, இது பயங்கரவாத சதிக்கான முன்னோட்டமா என்பதெல்லாம்

அவர்கள் விசாரணை முடிந்த பிறகு தெரியவரும்.

எங்களுக்கு டிசம்பர் 31ஆம் தேதி காலை எங்களுக்கு இந்த சந்தேகப் படகு குறித்த தகவல் உளவுத்துறையிடமிருந்து வந்தது. நாங்கள் மதியம் 1 மணியளவில் டோர்னியர் விமானத்தையும் ஒரு கப்பலையும் அந்தப் பகுதி நோக்கி அனுப்பினோம். நாங்கள் அந்தப் படகு சுற்றி கொண்டிருப்பதை கண்டு பிடித்தோம்.

நள்ளிரவில் நமது கப்பல் “ராஜ்ரதன்” அந்த வெடிபொருள் படகை நெருங்கியது. எச்சரிக்கை செய்தோம் சரணடைவதற்கு பதிலாக அந்த மீன்பிடிப் படகு குறுக்கு மறுக்காக ஓடியது. விளக்குகளையும் அணைத்து விட்டது. நாங்கள் அந்தப் படகை சுமார் ஒன்றரை மணி நேரம் துரத்தினோம். பிறகு அதனைத் தடுத்தோம், எச்சரிக்கை துப்பாக்கி சூடு நடத்தினோம், ஆனால் அது நிற்கவில்லை. சில நிமிடங்கள் கழித்து அந்தப் படகை தீவைத்து வெடிக்கச் செய்தனர்” என்றார்.

இந்த பரபரப்பு சம்பவத்தை அடுத்து குஜராத் கடல் பகுதியில் கண்காணிப்பு தீவிரப் படுத்தப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x