

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையின் போது கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி சி.ஆர்.குமாரசாமி அரசு வழக்கறிஞர் பவானி சிங்கிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினார்.அதற்கு பதில் சொல்ல முடியாமல் பவானி சிங் திணறியதால் நீதிபதி அதிருப்தி அடைந்தார்.
ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறை யீட்டு மனு மீதான விசாரணை கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நீதிபதி சி.ஆர்.குமாரசாமி முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.
ஜெ. தரப்பு வாதம்
ஜெயலலிதா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.குமார் வாதிட்ட தாவது: 1991-96 காலகட்டத்தில் ஜெயலலிதா வாங்கிய சொத்துகள், கட்டிடங்கள் புதுப்பித்தது, வாகனங் கள் வாங்கியது, பொருட்கள் வாங்கி யது உள்ளிட்ட அனைத்துக்கும் காசோலையே பயன்படுத்தினார்.
1991-ம் ஆண்டு ஜெயலலிதா பிறந்த நாளுக்காக அர்ச்சனா, கிருஷ்ணா, அடையார் ஆனந்தபவன் ஆகிய கடைகளில் ரூ.8 லட்சத்துக்கு இனிப்புகள் வாங்கி, அநாதை இல்லங் களுக்கு வழங்கினார். அதற்கு அவர் அளித்த காசோலையை தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் கணக்கில் சேர்த்து கொள்ள வில்லை.
7.9.1995-ல் நடந்த சுதாகரனின் திருமண செலவுகள் அனைத் தையும், நடிகர் சிவாஜி கணேசனின் குடும்பத்தினர் செய்தனர். ஆனால், 1997-ம் ஆண்டு தான் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் திருமணத்திற்காக செய்யப்பட்ட செலவுகள் குறித்து மதிப்பிட்டனர். இவ்வாறு, குமார் வாதிட்டார்.
திணறிய பவானிசிங்
இதையடுத்து நீதிபதி குமாரசாமி அரசு வழக்கறிஞர் பவானிசிங்கிடம், ‘‘ஜெயலலிதா தரப்பில் கூறப்படும் புகார்களுக்கு உங்களுடைய தரப்பு விளக்கம் என்ன? 1991-ம் ஆண்டுக்கு முன்னால் ஜெயலலிதா சினிமாவில் நடித்து பெற்ற வருமானத்தை வழக்கில் சேர்த்துக் கொண்டீர்களா? அவர் முதல்வராக இருந்த போது மாதம் 1 ரூபாய் வீதம் 5 ஆண்டுகளில் ரூ.60 ஊதியமாக பெற்றுள்ளார். அப்படியென்றால் ஜெயலலிதா குவித்த சொத்துக்கும், அவருடைய ஊதியத்துக்கும் உள்ள விகிதாச்சாரம் என்ன?'' என கேள்வி எழுப்பினார்.
நீதிபதியின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் அரசு வழக்கறிஞர் பவானிசிங் திணறினார். இதனால் கோபமடைந்த நீதிபதி குமாரசாமி, ‘‘அரசு வழக்கறிஞரான நீங்கள், முதலில் சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை வாசிக்க வேண்டும்'' என கடும் அதிருப்தியுடன் தெரிவித்தார்.
புதிய புகார்
ஜெயலலிதாவின் வழக்கறிஞர் பி.குமார் தொடர்ந்து பேசும்போது, ‘‘1997-ம் ஆண்டு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜெய லலிதா மீதான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டது.
அவரின் விளக்கத்தை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்ததில் நிறைய பிழைகள் இருக்கின்றன. அதனை மீண்டும் மறு மொழிப்பெயர்ப்பு செய்ய உத்தரவிட வேண்டும்''என்றார்.
இதைத்தொடர்ந்து “ஜெயலலிதா அளித்த விளக்கத்தை கர்நாடக மொழிபெயர்ப்புத்துறை இயக்குநர் சரியாக மொழிபெயர்க்க வேண்டும்” மறுமொழிபெயர்ப்பு செய்யப்பட்ட ஆவணங்களை வரும் 13-ம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்” என நீதிபதி உத்தரவிட்டார். விசாரணை இன்றும் தொடரவுள்ளது.