Last Updated : 06 Jan, 2015 12:55 PM

 

Published : 06 Jan 2015 12:55 PM
Last Updated : 06 Jan 2015 12:55 PM

திருநங்கைகளின் தோழி

பிறக்கும்போது ஆணாகப் பிறந்த ஒருவர் இடையில் பெண்ணாக மாறினால் திருநங்கை என அழைக்கிறோம். அப்படி மாறுபவர்கள் உடல்ரீதியாகவும் முழுமையாக தங்களை பெண்களாக மாற்றிக்கொள்வதற்கு சரியான மாற்று அறுவைச் சிகிச்சை முறை தற்போது இந்தியாவில் இல்லை. தரமற்ற அறுவைச் சிகிச்சைகளை செய்தவர்கள் பின்விளைவுகளால் துன்பப்படுகின்றனர்.

சமீபத்தில் திருநங்கைகள் உள்ளிட்ட மூன்றாம்பாலினத்தவருக்கு என தனியாக ஒரு மருத்துவப் பிரிவு புதுச்சேரியின் மகாத்மா காந்தி மருத்துவமனையில் இந்தியாவில் முதன் முறையாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதில் ஐந்து திருநங்கைகளும் பணியாற்றுகின்றனர்.

இத்தகைய முன்னேற்றத்துக்காக உழைத்தவர்களில் முக்கியமானவர் ஷீத்தல் நாயக் எனும் ஒரு திருநங்கை. திருநங்கைகளின் வாழ்வுரிமைகளுக்காக புதுச்சேரியில் செயல்படுபவர். அவர் புதுச்சேரியில் பிறந்தவர். பள்ளிப் பருவம் முதல் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளானவர். இன்னல்களுக்கு மத்தியில் கோவா பொறியியல் கல்லூரியில் கப்பல்கட்டும் பொறியியலைப் படித்து முடித்தார்.

திருப்பு முனை

இந்தக் காலகட்டத்தில் அவர் வேகமாக ஒரு திருநங்கையாக மாறினார். அவரது மாற்றங்களைக் கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். நெருங்கிய நண்பர்கள் கூட ஒதுக்க ஆரம்பித்தனர். நெருக்கடியால் வீட்டை விட்டு வெளியேறினார். புதுச்சேரியில் ஒரு உணவுவிடுதியில் வேலைக்குச் சேர்ந்தார்.

இந்த காலகட்டத்தில் கப்பல்கட்டும் பொறியியல் படிப்பு சார்ந்த வேலைக்கு மாதம் ரூபாய் ஒன்றரைலட்சம் சம்பளத்தோடு ஒரு வேலை வாய்ப்பு வந்தது. அதைப் புறக்கணித்துவிட்டு, திருநங்கைகளுக்கு வேலைவாய்ப்பு உள்ளிட்ட வாழ்வுரிமைகளைப் பெற்றுத் தருவதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறார்.

இந்த மாற்றத்துக்கான காரணம் என்ன என கேட்டதற்கு அவர் “ புதுவை பூங்காவில் ஒரு வாலிபன் பணம் தருவதாகக் கூறி அழைத்துப் பின்னர் காசு தராமல் ஒரு திருநங்கையை அடிப்பதைக் கண்டு கோபமடைந்தேன். நான் பணிபுரிந்த விடுதிக்குப் பிச்சை கேட்டு வந்த திருநங்கையை காவலாளி அடித்து விரட்டியதையும் கண்டேன்.

பெற்றோரால் கைவிடப்பட்ட ஒரு திருநங்கை என்னிடம் “எனக்கென்று யாரும் இல்லை” என்றாள். “நானிருக்கிறேன்” என்றேன். அதுவே என் வாழ்வின் திருப்புமுனையாக அமைந்தது. நான் அந்த வேலைக்குப் போயிருந்தால் இந்த சமூகப்பணிகளைச் செய்திருக்க முடியாது” என்றார்.

முதலமைச்சர் விருது

இவர் 2003-ஆம் ஆண்டு திருநங்கைகள் மத்தியில் பால்வினை நோய் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்துள்ளார். 2005-ஆம் ஆண்டு “சகோதரன் சமூக நல மேம்பாட்டு நிறுவனம்” என்ற ஒரு அமைப்பை உருவாக்கினார்.

திருநங்கைகளுக்கு என தனியான சுய உதவிக்குழுக்களை ஆரம்பித்துள்ளார். படித்த, திறமையான திருநங்கைகளுக்கான வேலை வாய்ப்புகளை ஒருங்கிணைக்கிறார். அரசாங்கத்திடம் போராடி, குடும்ப அட்டை , வாக்காளர் அடையாள அட்டை போன்ற அங்கீகாரங்களைப் பெற்றுத் தந்துள்ளார்.

“திருநங்கையர் திரைப்படத் திருவிழா-2014” நடத்தி உள்ளார். இத்தகையப் பணிகளுக்காக 2010-ஆண்டின் சிறந்த நிறுவனத்துக்கான விருதை முதலமைச்சர் ரங்கசாமியிடமிருந்து பெற்றுள்ளார்.

புதுவை மாநில திருநங்கைகள் கூட்டமைப்பின் தலைவியாக “நாயக்” எனும் பட்டம் பெற்றுள்ளார். சென்ற ஜூலை மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற மாநாட்டில் கலந்துகொண்டு திருநங்கைகளின் நிலை குறித்துப் பேசினார்.

திருநங்கைகளை மூன்றாம் பாலினமாக அங்கீகரித்து அவர்களுக் கான உரிமைகளை வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை உடனடியாக அமலாக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளும் ஷீத்தல், வீட்டை விட்டு ஓடிவரும் திருநங்கைகளை பாதுகாக்க தனி இல்லம் அமைக்க வேண்டும் என்கிறார். திருநங்கைகள் குழந்தைகளை தத்து எடுத்துக்கொள்வதையும் சட்டம் அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறார். அவரை 9894455200 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x