

ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ரூபேஷ் (14), தனது தாயார் கிரண் பேடியுடன் சேர்ந்து நேற்று முன்தினம் இரவு ஹைதராபாத் நகர் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள ஜெகந்நாதர் கோயிலுக்கு வந்தான். அங்கு கூட்ட நெரிசலில் சிக்கிய ரூபேஷ் காணாமல் போனான்.
அவனது தாயார் பல இடங்களில் தனது மகனை தேடினார். இதுகுறித்து திருமலைகிரி போலீஸில் புகார் அளித்தார். இந்நிலையில் கே.பி.ஆர். பூங்கா அருகே மொழி தெரியா மல் சுற்றி திரிந்து கொண்டிருந்த ரூபேஷை பஞ்சாரா ஹில்ஸ் போலீஸார் அழைத்துச் சென்று அவனது புகைப்படத்தை ‘வாட்ஸ் ஆப்’ பில் அப்-லோட் செய்து அனைத்து காவல் நிலையங்களுக் கும் தகவல் அனுப்பினர். மேலும் பஞ்சாரா ஹில்ஸ் காவல் நிலைய ஃபேஸ் புக் சமூக வலை தளத்திலும் இந்த தகவலை அனைத்து காவல் நிலையங்களுக்கும் அனுப்பினர்.
இதை அறிந்த திருமலைகிரி போலீஸார் உடனடியாக பஞ்சாரா ஹில்ஸ் காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு, காணாமல் போன ரூபேஷின் தாயார் கொடுத் துள்ள புகார் குறித்து தெரிவித்தனர். பின்னர் அரை மணி நேரத்தில் ரூபேஷை அவனது தாயாரிடம் போலீஸார் ஒப்படைத்தனர். மகனைக் கண்டதும் மகிழ்ச்சி அடைந்த தாயார் கிரண் பேடி, போலீஸாருக்கு நன்றி தெரிவித்தார்.