

காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான கிருஷ்ணா தீரத் அமித் ஷா முன்னிலையில் பாஜகவில் நேற்று இணைந்தார்.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை (தனிப்பொறுப்பு) இணையமைச்சராகப் பொறுப்பு வகித்தவர் கிருஷ்ணா தீரத் (59).
காங்கிரஸ் மூத்த தலைவர்களுள் ஒருவரான தீரத், பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா முன்னிலையில் பாஜகவில் நேற்று இணைந்தார். அவரை, அமித் ஷா பூங்கொத்துக் கொடுத்து வரவேற்றார்.
டெல்லி சட்டப்பேரவைத் தொகுதி யில் 1984 முதல் 2004 வரை போட்டியிட்டு வெற்றி பெற்றவர் தீரத். மேலும் வட மேற்கு டெல்லி மக்களவைத் தொகுதி உறுப்பினராக 2004, 2009-ம் ஆண்டுகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஷீலா தீட்சித் தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சராக இருந்துள்ளார். மேலும், டெல்லி சட்டப்பேரவைத் துணை தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.
பாஜகவில் இணைந்தது குறித்து கிருஷ்ணா தீரத் கூறியதாவது:
மக்களுக்கு சேவை செய்வதற்காக பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவை சந்தித்தேன். மக்கள் சேவைதான் என் குறிக்கோள். கட்சியில் எனது பணி என்ன என்பதை, தலைமைதான் முடிவு செய்யும்” என்றார்.
பாஜகவில் இணைந்துள்ள அவரை வரவேற்ற பாஜக தேசிய செயலாளர் காந்த் சர்மா, “பிரதமர் மோடியின் வளர்ச்சித் திட்டம் மற்றும் டெல்லியை உலகத் தரம் வாய்ந்த நகராக மாற்றும் அவரின் விருப்பத்தால் ஈர்க்கப்பட்டுள்ள மற்ற கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் பாஜகவில் இணைகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கருத்து கூறியுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் அஜய் மாக்கன், “டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலால் பாஜக பதற்றமடைந்துள்ளது.
தனது கட்சித் தலைவர்களை அது நம்பவில்லை. எனவே, எல்லா கட்சியிலிருந்தும் முக்கியத் தலைவர்களை பாஜக இறக்குமதி செய்ய தயாராக உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கிரண் பேடி, ஆம் ஆத்மி மூத்த தலைவர் ஷஷியா இல்மி ஆகியோர் பாஜகவில் சமீபத்தில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.