Published : 02 Jan 2015 03:29 PM
Last Updated : 02 Jan 2015 03:29 PM

நாட்டின் முன்னேற்றத்துக்கு நிதி ஆயோக் வழிவகுக்கும்: வெங்கய்யா நாயுடு நம்பிக்கை

திட்ட கமிஷனுக்கு மாற்றான 'நிதி ஆயோக்' புதிய அமைப்பு, மாநிலங்களின் வளர்ச்சிக்கும் நாட்டின் முன்னேற்றத்துக்கும் வழிவகுக்கும் என்று நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் வெங்கய்யா நாயுடு நம்பிக்கை தெரிவித்தார்.

மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு இன்று காலை சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டுச் சென்றார். அப்போது விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

"திட்ட கமிஷனுக்கு பதிலாக உருவாக்கப்பட்டுள்ள 'நிதி ஆயோக்' அமைப்பில் மாநில அரசுகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும்.

அனைத்து மாநில பிரதிநிதிகள், முதல்வர்களுடன் ஏற்கெனவே ஆலோசனை நடத்திய பின்னர்தான் திட்ட கமிஷன் என்பதை நிதி ஆயோக் என்ற அமைப்பாக ஏற்படுத்தி இருக்கிறார்கள்.

இது பற்றிய முழு விவரங்கள் எல்லா மாநில முதல்வர்களுக்கும் தெரிவித்து இருக்கிறோம். மாநிலங்களின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கும் நாட்டின் முன்னேற்றத்துக்கும் வழிவகுக்கும் என்பதற்காகவே இந்த அமைப்பை ஏற்படுத்தி இருக்கிறோம்.

இந்த அமைப்பு மூலம் மாநிலங்களுக்கு நிதி பங்கீடு செய்யும்போது வெளிப்படைத் தன்மையும், வளர்ச்சியும் தெரியும். காங்கிரஸ் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஆனால், மக்களுக்கு உண்மை தெரியும்.

காங்கிரஸ் 50 வருடமாக திட்டக் குழு மூலமாக எந்த மாற்றத்தையும் கொண்டு வரவில்லை. திட்டங்களை அறிவித்தார்களே தவிர செயல்படுத்தவில்லை.

நிலம் கையகப்படுத்தும் சட்டம் கொண்டு வருவதிலும் காங்கிரஸ் அரசியலாக்க முயற்சிக்கிறது. ஆனால், மாநில முதல்வர்களிடம் மத்திய அரசு நில சீர்த்திருந்த சட்டம் குறித்த அனைத்து விவரங்களையும் தெரிவித்து இருக்கின்றன. இதனால் வவசாயிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் நிலம் கையகப்படுத்தப்படும்.

இந்தச் சட்டத்தினால் பல தொழிற்சாலைகள் கொண்டு வரப்படும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகமாகக் கிடைக்கும்" என்று வெங்கய்யா நாயுடு தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x