Published : 06 Jan 2015 08:40 AM
Last Updated : 06 Jan 2015 08:40 AM

ஜம்மு-காஷ்மீரில் கூட்டணி ஆட்சி அமைக்க பாஜக-பிடிபி விரைவில் அதிகாரபூர்வ பேச்சுவார்த்தை: மாநில பாஜக தலைவர்களுடன் அமித் ஷா ஆலோசனை

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கூட்டணி ஆட்சி அமைப்பது தொடர்பாக பாஜக - மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி) இடையே விரைவில் அதிகாரபூர்வ பேச்சுவார்த்தை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதொடர்பாக ஜம்மு காஷ்மீர் மாநில பாஜக தலைவர்கள் கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷாவை டெல்லியில் உள்ள அவரது வீட்டில் நேற்று சந்தித்துப் பேசினர். பிடிபி கட்சியுடன் மேற்கொண்டு பேச்சுவார்த்தை நடத்துவது தொடர்பாக இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படு கிறது.

இந்தக் கூட்டத்துக்குப் பிறகு பாஜக பொதுச் செயலாளர் ராம் மாதவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஜம்மு காஷ்மீரில் நிலையான ஆட்சி அமைய வேண்டும் என்பதே பாஜகவின் விருப்பம். எனவே, கூட்டணி ஆட்சி அமைப்பது தொடர்பாக பிடிபி கட்சியுடன் இதுவரை மறைமுகமான பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இனி அதிகாரபூர்வமாக பேச்சுவார்த்தை நடத்த பிடிபி முன்வந்துள்ளது. இதன்மூலம் இந்த விவகாரத்தில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

முதல்வர் பதவி யாருக்கு

சுமார் 90 நிமிடங்கள் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் முதல்வர் பதவி யாருக்கு வழங்குவது, 370-வது சட்டப் பிரிவு, ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் ஆகிய விவகாரங்களில் எத்தகைய நிலைப்பாட்டை எடுப்பது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தொகுதி அடிப்படையில் பிடிபியைவிட குறைவாக பெற்றிருந்தாலும், அதிக வாக்கு களைப் பெற்றிருப்பதால் முதல்வர் பதவியை தங்களுக்கு விட்டுத்தர வேண்டும் என்று பாஜக விரும்புவதாகக் கூறப்படு கிறது.

இந்தக் கூட்டத்தில் ராம் மாதவ், மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், மாநில பொறுப்பாளர் அவினாஷ் ராய் கண்ணா, மாநில தலைவர் ஜுகல் கிஷோர் சர்மா மற்றும் மாநில மூத்த தலைவர்கள் நிர்மல் சிங், பலி பகத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x