

தெலங்கானாவில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் பிறந்த சிசுக்களை அதன் ஊழியர்கள் மாற்றிக் கொடுத்ததால் பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, மரபணு சோதனைக்கு உத்தரவிடப்பட்டது.
நல்கொண்டா மாவட்டம், வடபர்த்தியைச் சேர்ந்த தீபிகா (21), யாதகிரி குட்டாவைச் சேர்ந்த கனக லட்சுமி (23) ஆகிய இருவரும் பிரசவத்துக்காக புவனகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டனர். கனக லட்சுமிக்கு நேற்று முன்தினம் மதியம் 12.21 மணிக்கு பெண் சிசுவும், தீபிகாவுக்கு மதியம் 12.34-க்கு ஆண் சிசுவும் பிறந்தன.
பிறந்த குழந்தைகளை சுத்தப்படுத்தி அவரவர் உறவினர் களிடம் ஒப்படைக்கும்படி ஊழியர் இஸ்தாரம்மாவிடம் மருத்துவர்கள் கூறினர். ஆனால் அவர் அவசரத்தில் குழந்தைகளை மாற்றிக் கொடுத் துள்ளார். அதன் பிறகு குழந்தைகள் மாறிப்போனதாக இஸ்தாரம்மா உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். ஆனால் ஆண் குழந்தையை பெற்றுக் கொண்ட உறவினர்கள் குழந்தையை ஒப்படைக்க மறுத்து விட்டனர்.
இதனைத் தொடர்ந்து மருத்துவர்கள் இதுகுறித்து புவனகிரி போலீஸாருக்கு புகார் தெரிவித்தனர். இதற்குள் இரு குடும்பத்தாரும் மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். போலீஸார் வந்து இருதரப்பினரையும் சமாதனப்படுத்தினர். அதற்கு பலன் கிடைக்கவில்லை.
மாலை 4 மணி ஆனது. இதனால் பிறந்த குழந்தைகள் பசியால்அழத்தொடங்கினர். ஆனால் யாருக்கு யார் தாய்ப்பால் கொடுப்பது எனும் பிரச்சினையும் எழுந்தது. இதனால் பரபரப்பு மேலும் அதிகரித்தது. இறுதியில், மரபணு சோதனை நடத்தலாம் என மருத்துவர்களும், போலீஸாரும் தெரிவித்தனர். அதுவரை மருத்துவமனையின் குறிப்பில் உள்ளது போன்று குழந்தைகள் ஒப்படைக்க வேண்டும் என யோசனை தெரிவித்தனர்.
அதன்படி, குழந்தைகள் அவரவர் தாயிடம் ஒப்படைக் கப்பட்டன. பின்னர் இந்தப் பிரச்சினைக்கு தற்காலிக முற்றுப் புள்ளி வைக்கப்பட்டுள்ளது. கவனக்குறைவாக செயல்பட்ட ஊழியர் இஸ்தாரம்மா மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப் படும் என மருத்துவமனை அதி காரிகள் தெரிவித்தனர்.