

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் பாபுலால் மராண்டியின் ஜார்க் கண்ட் விகாஸ் மோர்ச்சா கட்சியை தங்கள் கட்சியுடன் இணைத்துக் கொள்ள ஆளும் பாஜக முயன்று வருகிறது.
ஜார்க்கண்டில் 81 தொகுதி களைக் கொண்ட சட்டப்பேரவைத் தேர்தலில் 37 இடங்களில் வெற்றி பெற்ற பாஜக, தனது கூட்டணி கட்சியான அனைத்து ஜார்கண்ட் மாணவர் சங்க கட்சியின் 5 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது. இதில் ஒருவருக்கு மாநில அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. ஆனாலும் அக்கட்சியின் தலைவர் சுதேஷ் மஹ்தோவுக்கு மத்திய அமைச்சர் பதவி உட்பட மேலும் சில பதவிகளை வழங்க வேண்டும் என்று மறைமுகமாக வற்புறுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
இதற்கு முன்பு இக்கட்சி அடிக் கடி அணி தாவி வந்துள்ளது. கட்சித் தாவல் தடை சட்டத்தில் சிக்காத வகையில் இக்கட்சியின் இரு எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க சிபுசோரணின் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் காரண மாக 8 எம்.எல்.ஏ.க்களை வைத் திருக்கும் பாபுலால் மராண்டியின் ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச் சாவை தங்கள் கட்சியுடன் இணைத் துக் கொண்டால் ஆட்சிக்கு ஆபத்து ஏற்படாது என பாஜக விரும்புகிறது.
இது குறித்து ‘தி இந்து’விடம் பாஜக தேசிய நிர்வாகிகள் வட்டா ரம் கூறும்போது, “முதன்முறை யாக பழங்குடி இனத்தைச் சேராத ரகுவர் தாஸ் முதல்வராகி உள்ளார். இதற்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இதையே காரணமாக வைத்து எதிர்க்கட்சிகள் ஆட்சியை கவிழ்க்க முயல்வார்கள். அவரது கட்சியை பாஜகவுடன் இணைப் பதுதான் பாதுகாப்பாக இருக்கும் என தலைவர் அமித் ஷா கருது கிறார்” என்றனர்.
இதற்காக, இரண்டு தொகுதி களில் போட்டியிட்டும் வெற்றி பெறாத மராண்டிக்கு மத்திய அமைச்சர் பதவியும், அவரது எம்.எல்.ஏ.க்களில் நான்கு பேருக்கு அமைச்சர் பதவியும் தர பாஜக தயாராகி விட்டதாகவும் டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன.
கடந்த 2000-ம் ஆண்டு பிஹாரி லிருந்து பிரிந்த ஜார்க்கண்டில் அமைந்த பாஜக ஆட்சியின் முதல் முதல்வராக இருந்தவர் பாபுலால் மராண்டி. பிறகு அவருக்கு பதிலாக அர்ஜுன் முண்டாவை முதல்வ ராக்கியதால் பாஜகவிலிருந்து வெளியேறி புதிய கட்சியை தொடங்கினார்.
எனினும், தொடக்கத்தில் அவருடன் இருந்தவர்கள் வெளி யேறிவிட, இந்தமுறை அவரது எம்.எல்.ஏ.க்களில் பலர் பல்வேறு கட்சிகளிலிருந்து தேர்தலுக்கு சற்று முன்பாக இணைந்தவர்கள். இதனால் மராண்டியும் தனது கட்சியை பாஜகவுடன் இணைக்க தயக்கம் காட்டுவதாகக் கூறப் படுகிறது.