சபரிமலையில் மகரஜோதி தரிசனம்: பக்தர்கள் சரண கோஷம்

சபரிமலையில் மகரஜோதி தரிசனம்: பக்தர்கள் சரண கோஷம்
Updated on
1 min read

சபரிமலை ஐயப்பன் கோயிலில் நேற்று மாலை காட்சியளித்த மகரஜோதியை லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசித்தனர்.

கேரள மாநிலம் பத்தனம்திட்டை மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரவிளக்கு பூஜைக்காக டிசம்பர் 30-ம் தேதி நடைதிறக்கப்பட்டது. நேற்று அதிகாலை 3 மணிமுதல் நெய் அபிஷேகம் நடைபெற்றது. மதியம் 12.30 மணிக்கு உச்ச பூஜை நடைபெற்றது. அதன்பிறகு பகல் 1.40 மணிக்கு நடை சாத்தப்பட்டது.

மாலை 5 மணிக்கு மீண்டும் நடைதிறக்கப்பட்டது. மாலை 6 மணியளவில் வானம் மேகமூட்டமாக இருள் படர தொடங்கியது. அப்போது கிழக்கு வானில் நட்சத்திரம் ஒளிர ஆரம்பித்தது. அதை பார்த்ததுமே பக்தர்கள் பரவசத்துடன் ‘சுவாமியே சரணம் ஐயப்பா’ என சரண கோஷம் எழுப்பினர்.

மேள தாளத்துடன் எடுத்துவரப்பட்ட திருவாபரணப் பெட்டிகளுக்கு முதலில் சரங்குத்தியில் வரவேற்பு அளிக்கப்பட்டது. மாலை 6.40 மணிக்கு பதினெட்டாம் படி வழியே திருக்கோயில் முன் வந்ததும், திருவாபரணங்களை தந்திரி கண்டரரு ராஜீவரரு, மேல்சாந்தி இ.என்.கிருஷ்ணதாஸ் நம்பூதிரி பெற்றுக் கொண்டனர். அவற்றில் இரண்டு பெட்டகங்கள் மாளிகைப்புரம் கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டன.

உடனடியாக மூலஸ்தானம் நடைசாத்தப்பட்டு, சுவாமிக்கு திருவாபரணங்களால் அலங்காரம் செய்யப்பட்டது. மாலை 6.50 மணிக்கு நடைதிறக்கப்பட்டு மூலஸ்தானத்தில் மஹா தீபாராதனை நடைபெற்றது. அதேவேளை, சன்னிதானத்துக்கு எதிரே பொன்னம்பலமேடு எனப்படும் மலை உச்சியிலும் மூன்றுமுறை மகரவிளக்கு ஜோதி பிரகாசமாக தெரிந்தது. அப்போது, சன்னி தானத்தில் கூடியிருந்த பக்தர்களின் சரண கோஷம் விண்ணை முட்டியது.

மகர விளக்கை தரிசிப்பதற்காக சன்னிதானம் மற்றுமின்றி பம்பை மலை முகடுகள், புல்லுமேடு, பருந்தும்பரா, பாஞ்சாலிமேடு, அட்டதோடு போன்ற இடங்களில் எல்லாம் பக்தர்கள் திரண்டி ருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in