Last Updated : 05 Jan, 2015 11:55 AM

 

Published : 05 Jan 2015 11:55 AM
Last Updated : 05 Jan 2015 11:55 AM

காந்தி பெயரில் பீர் விற்பனை: மன்னிப்பு கேட்டது அமெரிக்க நிறுவனம்

மகாத்மா காந்தி பெயரில் பீர் விற்கப்படுவதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதையடுத்து அமெரிக்க நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த ‘நியூ இங்கிலாந்து புரோவிங்’ நிறுவனம் ‘காந்தி பாட்’ என்ற பெயரில் பீர் வகை மதுபானத்தை அறிமுகம் செய்துள்ளது. அந்த பீர் டின்களில் காந்தியின் உருவப்படம் அச்சிடப் பட்டுள்ளது. இதுதொடர்பாக ஆந்திர மாநிலம் ஹைதராபாதை சேர்ந்த சுங்கரி ஜனார்தன் கவுட் என்ற வழக்கறிஞர் சைபராபாத் மெட்ரோபாலிட்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

தேசத் தந்தை மகாத்மா பெயர், படத்துடன் மதுபானம் விற்கப் படுகிறது. இது இந்திய தேசத்தின் மதிப்பையும் மாண்பையும் குலைக் கும் வகையில் உள்ளது. அமெரிக்க நிறுவனத்தின் செயல்பாடு இந்திய சட்ட விதிகளுக்கு எதிரானது என்று வழக்கறிஞர் சுங்கரி ஜனார்தன் கவுட் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.

இதனிடையே காந்தியின் பெயரில் மதுபானம் விற்கப்படுவதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தனது வாழ்நாள் முழுவதும் மதுவிலக்கை வலியுறுத்திய காந்தியின் பெயரில் மதுபானம் விற்கப்படுவது ஏற்றுக் கொள்ள முடியாதது என்று காந்தியவாதிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

மதுபான நிறுவனம் விளக்கம்

இந்த விவகாரம் தொடர்பாக ‘நியூ இங்கிலாந்து புரோவிங்’ நிறுவன தலைமை நிர்வாகி மேத் வெஸ்ட்பால் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறியிருப்பதாவது:

‘காந்தி பாட்’ பீர் டின்களில் அவரது புகைப்படம் அச்சிடப்பட்டி ருப்பது இந்தியர்களின் மனதை புண்படுத்தியிருந்தால் அதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள் கிறேன். யாரையும் புண்படுத்த வேண்டும் என்பது எங்கள் நோக்கம் அல்ல. காந்தியின் மீது நாங்களும் மிகுந்த மரியாதை வைத்துள் ளோம். எங்களது பானத்தை வாங்கும் வாடிக்கையாளர்கள் காந்தியால் ஈர்க்கப்பட்டு அவர் குறித்தும் அவரது அஹிம்சை கொள்கைகள் குறித்தும் அறிந்து கொள்வார்கள் என்பதே எங்களின் நோக்கம். காந்தியின் பேரன், பேத்தி கள் கூட எங்களது லேபிளை பார்த்து வியந்து பாராட்டினர்.

இவ்வாறு அவர் தெரிவித் துள்ளார்.

தொடரும் அவமரியாதை

அமெரிக்கா உள்ளிட்ட மேற் கத்திய நாடுகளில் காலணிகள், உள்ளாடைகளில் இந்திய கடவுள் களின் படங்களை அச்சிட்டு விற்பனை செய்வது காலகாலமாக நடைபெற்று வருகிறது. பல்வேறு ஹாலிவுட் திரைப்படங்களில் இந்திய கலாசாரத்தை இழிவு படுத்தும் காட்சிகள் இடம்பெற்று வருகின்றன.

மங்கள்யான் விண்கலத்தை செவ்வாய்க்கிரக சுற்றுவட்ட பாதையில் இந்திய விஞ்ஞானிகள் வெற்றிகரமாக நிலைநிறுத்தியதை இனவாத அடிப்படையில் விமர்சித்து ‘நியூயார்க் டைம்ஸ்’ நாளிதழ் கார்ட்டூன் வெளியிட்டதும் நினைவுகூரத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x