வீட்டுப் பணியாளரை சித்ரவதை செய்கிறது டெல்லி போலீஸ்: சசி தரூர் அதிர்ச்சிப் புகார்

வீட்டுப் பணியாளரை சித்ரவதை செய்கிறது டெல்லி போலீஸ்: சசி தரூர் அதிர்ச்சிப் புகார்
Updated on
1 min read

சுனந்தா புஷ்கர் மரணம் தொடர்பாக எழுந்துள்ள புதிய விவரங்களின் அடிப்படையில் சிறப்பு விசாரணைக் குழுவை டெல்லி காவல்துறை அமைத்திருக்கும் வேளையில், தன் வீட்டு வேலைக்காரரை சித்ரவதை செய்வதாக சசி தரூர் திடுக்கிடும் புகாரை எழுப்பியுள்ளார்.

அதாவது வீட்டு வேலைக்காரர் நாராயண் சிங்கும், சசி தரூரும் சேர்ந்து கொலை செய்ததாக ஒப்புதல் வாக்குமூலம் அளிக்க நாராயண் சிங்கை டெல்லி காவல்துறையினர் அடித்து துன்புறுத்துகின்றனர் என்று டெல்லி காவல்துறை ஆணையர் பி.எஸ்.பாஸிக்கு நவம்பர் 12-ஆம் தேதி சசி தரூர் கடிதம் எழுதியுள்ளார்.

"7/11/2014 மற்றும் 8/11/2014 ஆகிய இரு தினங்களில் டெல்லி காவலதிகாரிகள் நடத்திய 16 மணி நேர விசாரணையில், எனது வீட்டு வேலைக்காரர் நாராயண் சிங்கை உங்களது அதிகாரிகளில் ஒருவர் தொடர்ந்து தாக்கியுள்ளார் என்ற செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடைந்தேன்

மேலும், நானும் நாராயண் சிங்கும் சேர்ந்து என் மனைவியை கொலை செய்தோம் என்று அவரிடமிருந்து வாக்குமூலம் பெறவே அவர்கள் நாராயண் சிங்கை துன்புறுத்துகின்றனர் என்பது மோசமான சூழலைக் காட்டுகிறது.

இந்த நடத்தை ஏற்றுக் கொள்ள முடியாததும், சட்ட விரோதமும் ஆகும். அப்பாவி நபர் ஒருவரை சித்ரவதை மூலம் வாக்குமூலம் அளிக்க வைத்து குற்றம் சாட்டுவது என்ற நடைமுறை மிக மோசமானது.

எனவே, இதுபோன்ற சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் உங்கள் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்று அவர் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், டெல்லி காவல்துறை ஆணையர் பாஸியிடம் அவர் நவம்பர் 8-ஆம் தேதி மேற்கொண்ட தொலைபேசி உரையாடலையும் குறிப்பிட்டுள்ளார்.

சுனந்தா மரணம் குறித்த மருத்துவ அறிக்கையில் அவர் விஷம் ஏற்றப்பட்டு உயிரிழந்ததாக குறிப்பிட்டதையடுத்து டெல்லி போலீஸார் கொலை வழக்கு தொடர்ந்துள்ளனர். ஆனால், சந்தேகப்படும் நபராக ஒருவர் பெயரையும் இன்னும் குறிப்பிடவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in