பாகிஸ்தான் படகில் வந்தவர்களுக்கு பயங்கரவாதத் தொடர்பு: பாதுகாப்பு அமைச்சர் சந்தேகம்

பாகிஸ்தான் படகில் வந்தவர்களுக்கு பயங்கரவாதத் தொடர்பு: பாதுகாப்பு அமைச்சர் சந்தேகம்
Updated on
1 min read

பாகிஸ்தானில் இருந்து குஜராத் வழியாக ஊடுருவ முயன்ற படகில் இருந்தவர்களுக்கு பயங்கரவாதத் தொடர்பு இருக்க வாய்ப்பிருப்பதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பரிக்கர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

குஜராத் கடற்பகுதியில் வெடித்துச் சிதறிய படகு குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பரிக்கர், அந்தப் படகில் வந்தவர்கள் பயங்கரவாதிகளாக அல்லது பயங்கரவாத தொடர்பு இருந்திருக்கக் கூடியவர்களாக இருக்க வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்தார்.

இது குறித்து மேலும் அவர் கூறும்போது, "வெடித்துச் சிதறிய படகில் வந்தவர்கள் நிச்சயம் கடத்தல்காரர்கள் இல்லை. அவர்களுக்கு பயங்கரவாதத் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. கடத்தல் சம்பவத்தில் மட்டும் ஈடுபடுபவர்களாக இருந்தால், அவர்கள் கடத்தல் தடுப்பு போலீஸாரிடம் சரணடைந்திருக்கலாம்.

இந்தியாவுக்குள் தங்கம், போதைப் பொருட்கள் போன்றவற்றோடு நுழைபவர்கள் பொதுவாக மீன்பிடிப் பகுதி அல்லது வர்த்தகப் பாதையை மட்டுமே தேர்ந்தெடுப்பார்கள். அப்படி வந்தால் மட்டுமே அவர்களால் மீனவர்கள் அல்லது வர்த்தகத் தொழிலாளர்கள் மத்தியில் கலந்தவாறு எல்லைக்குள் நுழைய முடியும்.

ஆனால், அந்தப் படகு வந்த பாதை மீன்பிடி பகுதியில்லை என்பதனை கவனிக்க வேண்டியுள்ளது. விமானப்படையினர் வழங்கிய 12 மணி நேரக் கண்காணிப்பு அறிக்கைப்படி, அந்தப் படகு ஒதுக்குப்புற பாதையில் தான் வர முயற்சித்துள்ளது. இதனால், இந்தப் படகு ஊடுருவல் முயற்சி சம்பவத்தை கடத்தலோடு தொடர்புப்படுத்த முடியாது" என்றார்.

புதுவருடத்திற்கு முந்தைய இரவில் பாகிஸ்தானின் கராச்சியில் இருந்து வெடிகுண்டுகளுடன் ஒரு படகு இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்தது. கடலோரக் காவல் படையிடம் அந்தப் படகு சிக்கிய நிலையில், அப்படகு வெடிக்க வைக்கப்பட்டது. அதில் இருந்த தீவிரவாதிகள் தப்பிவிட்டார்களா அல்லது வெடித்து சிதறி விட்டார்களா என்ற தகவல் தெளிவாகாமல் உள்ளது.

எனினும், அவர்கள் பாகிஸ்தான் ராணுவத்தின் உதவியுடன் இந்தியாவில் மீண்டும் ஒரு பெரிய தாக்குதலை நடத்த கடல்வழியாக ஊடுருவ முயன்றது தெரிய வந்துள்ளது. இது சம்பந்தப்பட்ட ஆதாரங்களை திரட்டும் பணியில் உளவுத்துறை இறங்கியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in