Published : 14 Jan 2015 01:41 PM
Last Updated : 14 Jan 2015 01:41 PM

கல்வி மற்றும் சுகாதார துறையில்: மத்திய அரசு நிர்ணயித்த இலக்குகளை 4 ஆண்டுக்கு முன்பே எட்டியது தமிழகம் அமைச்சர் கே.சி.வீரமணி பெருமிதம்

கல்வி மற்றும் சுகாதாரத்துறையில் மத்திய அரசு நிர்ணயித்த இலக்குகளை தமிழக அரசு 4 ஆண்டுக்கு முன்பே எட்டிவிட்டது என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி பெருமிதத்துடன் கூறினார்.

தமிழ்நாடு தொல்லியல் துறை வசம் உள்ள ஓலைச்சுவடிகள், தாள் சுவடிகளை இணையத்தில் வெளியிடும் நிகழ்ச்சி சென்னை எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியத்தில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி தலைமை தாங்கி ஓலைச்சுவடிகள், தாள் சுவடிகளை கொண்ட இணையதளத்தை அறிமுகப்படுத்தினார். அதைத் தொடர்ந்து புராதன நினைவுச் சின்னங்கள் பாதுகாப்பு மற்றும் புனரமைப்பு குறித்த பயிற்சி வகுப்புகளில் பங்கேற்ற ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கி அமைச்சர் பேசியதாவது:

தமிழகத்தில் ஏராளமான ஓலைச்சுவடிகள் உள்ளன. தஞ்சாவூர், சேலம், சென்னை போன்ற பகுதிகளில் ஓலைச் சுவடிகள் அதிக அளவில் கண் டெடுக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.

இவற்றில் உள்ள கருத்துகள் மக்களைச் சென்றடைய வேண்டும். அதன் மூலம் ஆய்வுகள் நடத்த வேண்டும் என்ற அடிப்படையில் அவற்றை பராமரிப்பதில் தமிழக அரசு மிகுந்த சிரத்தை எடுத்து வருகி றது. அதற்காகத்தான் ஓலைச் சுவடிகளை இணையதளத்தில் வெளியிட்டுள்ளோம்.

எல்லா மாநிலங்களும் குறிப் பிட்ட இலக்குகளை குறிப்பிட்ட காலத்துக்குள் அடைய வேண் டும் என்று மத்திய அரசு சில இலக்குகளை நிர்ணயம் செய்யும். சுகாதாரம், கல்வி போன்ற பல துறைகளில் 2018-19ம் ஆண்டுக்குள் சாதிக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்திருந்த இலக்குகள் அனைத்தையும், தமிழக அரசு 4 ஆண்டுகளுக்கு முன்பாக தற்போதே அடைந்துவிட்டது.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

தமிழ்நாடு தொல்லியல் துறை ஆணையர் தா.கார்த்திகேயன் கூறும்போது, ‘‘தமிழக தொல் லியல் துறையிடம் 72,748 கட்டு ஓலைச்சுவடிகள் உள்ளன. இவற்றின் மொத்த எண்ணிக்கை 26 லட்சம் ஆகும். இவற்றைப் பாதுகாக்க வேண்டும் என்பதில் தமிழக அரசு மிகுந்த கவனத் தோடு உள்ளது. தற்போது முதல்கட்டமாக 3 லட்சம் ஓலைச் சுவடிகளை இணையத்தில் வெளியிட்டுள்ளோம். இந்த ஓலைச்சுவடிகளை www.tnarch.gov.in என்ற இணையதளத்தில் காணலாம்’’ என்றார்.

இந்நிகழ்ச்சியில் சீவக சிந்தா மணி, திருவாசகம், போன்ற இலக்கியங்களும் அவற்றின் உரையும் ஓலைச்சுவடிகளில் மக்கள் பார்வைக்கு வைக்கப் பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x