Published : 19 Jan 2015 09:03 PM
Last Updated : 19 Jan 2015 09:03 PM

திரைப்படத் தணிக்கைக் குழுவின் புதிய தலைவராக பஹ்லாஜ் நிஹலானி நியமனம்

மத்திய திரைப்படத் தணிக்கைக் குழு (சிபிஎஃப்சி) புதிய தலைவராக, சினிமா தயாரிப்பாளர் பஹ்லாஜ் நிஹாலினி நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை திங்கள்கிழமை வெளியிட்டது.

அவருடன் மிஹிர் பூட்டா, பேராசிரியர் சையது அப்துல் பாரி, ரமேஷ் படாங்கே, ஜார்ஜ் பேக்கர், சந்திர பிரகாஷ் துவிவேதி, வாணி திரிபாதி டிக்கூ, ஜீவிதா, எஸ்.வி.சேகர், அசோக் பண்டிட் ஆகிய 9 பேர் தணிக்கைக் குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

மத்திய திரைப்பட தணிக்கைக் குழுவின் தலைவராக பஹ்லாஜ் நிஹலானி நியமிக்கப்பட்டுள்ளார் என்றும், இன்று முதல் மூன்று ஆண்டுகள் வரை அல்லது அடுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை அவர் தனது பொறுப்பில் இருப்பார் என்றும் மத்திய அரசின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

பலஜ் நிஹாலினி 'ஷோலே அவுர் ஷப்னம்', 'அந்தாஸ்' உள்ளிட்ட பல திரைப்படத் தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, பஞ்சாப் மாநிலத்தில் தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மித் ராம் ரஹீம் சிங் நடித்துள்ள, 'மெஸஞ்சர் ஆப் காட்' என்ற திரைப்படத்துக்கு தணிக்கை குழு சான்றளிக்க மறுப்பு தெரிவித்தது. இந்தப் படம் சீக்கியர்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் விதத்தில் உள்ளதாகக் கூறப்பட்டது. ஆனால், மேல்முறையீட்டு தீர்ப்பாயம் படத்துக்கு அனுமதி வழங்கியது.

இதையடுத்து தணிக்கைக் குழு தலைவர் லீலா சாம்சன், தனது பதவியை ராஜினாமா செய்தார். ''தணிக்கை குழுவில் அரசின் தலையீடு, உறுப்பினர்களிடம் முறைகேடு போன்றவை அதிகரித்து விட்டது'' என்று லீலா சாம்சன் குற்றம் சாட்டினார். அதை மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் திட்டவட்டமாக மறுத்தது.

அந்தப் பரபரப்பான சூழ்நிலையில் லீலா சாம்சனுக்கு ஆதரவு தெரிவித்தும், தணிக்கைக் குழுவுக்கு மதிப்பளிக்க மத்திய அரசு தவறி விட்டது என்று கூறியும், குழுவின் 9 உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x