

பிஹாரில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் அதிருப்தி எம்எல்ஏக்கள் பாஜகவில் சே திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் பிரிந்த ஜனதா கட்சிகள் ஒன்றிணைவதை எதிர்க்கும் விதமாக மேலும் பலரை இழுக்கவும் முயன்று வருவதாகத் தெரிகிறது.
ஐக்கிய ஜனதா தள எம்எல்ஏக்கள் 4 பேர் கடந்த ஆண்டு நவம்பர் 1-ம் தேதி தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இதற்கு உயர் நீதிமன்றம் கடந்த 6-ம் தேதி தடை விதித்தது. இதேபோன்று தடை உத்தரவு பெற அவர்களுக்கும் முன்னதாக தகுதி நீக்கம் செய்யப்பட்ட மேலும் நான்கு எம்எல்ஏக்களும் நீதிமன்றத்தை அனுகியுள்ளனர். பிரிந்த ஜனதா கட்சிகள் ஒன்றிணைய இவர்கள் அனைவரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் அவர்கள் பாஜகவில் இணைய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுபடுகிறது.
இவர்களில் ஒரு எம்எல்ஏவான கியானு என்கிற கியானேந்தர் சிங், ‘தி இந்து’விடம் கூறும்போது, ‘ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியுடன் எங்கள் கட்சியை இணைக்க அனுமதிக்க மாட்டோம். நிதீஷ் குமார் விரும்பினால் அவர் மட்டும் லாலுவுடன் போகட்டும். நிதீஷின் செயல்பாட்டால் பல எம்எல்ஏக்கள் அதிருப்தியில் உள்ளனர். அவர் முதல்வர் மாஞ்சியை நீக்கிவிட்டு மீண்டும் அப்பதவியில் அமர முயற்சிக்கிறார். பாஜகவின் ஆதரவைப் பெற்றாவது மாஞ்சியை முதல்வராக நீட்டிக்க வைப் போமே தவிர நிதீஷ் முதல்வராக விட மாட்டோம்” என்றார்.
பாஜக அழைப்பு
அதிருப்தி எம்எல்ஏக்கள் அனைவரும் தங்கள் கட்சியில் சேர வேண்டும் என்று பிஹார் சட்டப்பேரவை பாஜக தலைவர் சுசில்குமார் மோடி அழைப்பு விடுத்திருந்தார். இதையடுத்து, மோடியை கியானேந்தர் சந்தித்துப் பேசியுள்ளார். இதனால் கியானேந்தர் தலைமையில் ஐக்கிய ஜனதாவிலிருந்து நீக்கப்பட்ட 8 பேரும் பாஜகவில் இணைய வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.
மேலும் லாலு கட்சியுடன் நிதீஷ் கட்சி இணைந்தால், அடுத்து வரவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் சுமார் 12 எம்எல்ஏக்கள் மீண்டும் போட்டியிடுவதில் சிக்கல் ஏற்படும். எனவே, அவர்களிடமும் கியானேந்தர் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
வரும் ஜனவரி 23-ம் தேதி பாஜக தலைவர் அமித் ஷா பிஹாருக்கு வர உள்ளார். அப்போது அவரது முன்னிலையில் ஐக்கிய ஜனதா தள கட்சியின் அதிருப்தி எம்எல்ஏக்கள் பாஜகவில் சேருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பிஹார் சட்டப்பேரவைக்கு இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடக்க உள்ளது. அதற்கு முன்னதாக கட்சியை பலப்படுத்த பாஜக தலைவர் அமித் ஷா உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.