

"நான் பிரதரானால், கட்சி வேறுபாடின்றி கிரிமினல் பின்னணி உள்ள எம்.பி.க்களின் மீதான நிலுவை வழக்குகளை விரைந்து விசாரிக்க ஒரு குழுவை அமைப்பதுதான் என் முதல் வேலையாக இருக்கும்" என்றார் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி.
மேலும், "ஏழைகளின் வீட்டுக்கு செல்வதை தாஜ்மஹாலை சுற்றுப் பார்ப்பது போலவே ராகுல் காந்தி நினைக்கிறார்" என்று அவர் சாடினார்.
உத்தரப் பிரதேசத்தின் ஹர்தோய் பகுதியில் இன்று அவர் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பேசியதாவது:
"உத்தரப் பிரதேசத்தில் நிலவும் ஏழ்மைக்கு சமாஜ் வாடி, காங்கிரஸ் மற்றும் பகுஜன் சமாஜ் ஆகிய மூன்று கட்சிகளுமே பொறுப்பு. இந்த மூன்று கட்சிகளும் தங்களுக்கு அளிக்கப்பட்ட அதிகாரத்தை தங்களின் குடும்பத்தின் வளர்ச்சிக்காகவே பயன்படுத்தி கொண்டுள்ளன.
இதே நிலைதான் தேசிய அளவிலும், ஏழைகள் குறித்து ஆய்வு செய்வதாக கூறும் ராகுல், ஏழைகளின் வீட்டை என்னவோ தாஜ்மஹாலை சுற்றிப் பார்ப்பது போல் நினைக்கிறார். ஆனால், உண்மையில் ஆவருக்கு ஒரு ஏழையின் வேதனை புரியாது. உத்தரப் பிரதேசத்துக்கும் சுற்றிப் பார்க்கவே வருகிறார்.
செல்வந்தாரக இருப்பவர்களுக்கு ஆச்சிரியமாக இருக்கிறது, 'ஏழைக்கும் கால்கள் இருக்கின்றதே, இரண்டு கைகள் இருக்கின்றதே, அவர்களாலும் பேசமுடிகின்றதே' என்று பார்க்கின்றனர். மக்களின் வறுமையை பார்ப்பதை சுற்றுலா தலத்திற்கு செல்வது போல் நினைக்கின்றனர்.
நானோ ஒரு டீ விற்பவனாக இருந்தவன். ஆனால், என்னை எதிர்க்கும் வேட்பாளர்கள் அனைவரும் தகுதியில் மிக பெரியவர்களாக இருக்கின்றனர். பிறந்து வளர்ந்தது முதல் எல்லாவற்றிலும் செல்வந்தராக இருந்துவிட்டு, தேர்தலுக்கு வாக்கு கேட்கும்போது மட்டும் பிற்படுத்தப்பட்டோருக்கானவர் போல மாறி விடுகின்றனர்.
மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்றதும், குற்ற விவகாரங்கள் மீது நடவடிக்கை எடுத்து, அரசியல் மற்றும் நாடாளுமன்ற அமைப்பை சுத்தப்படுத்துவேன். பாஜக தலைமையிலான அரசு தேர்ந்தெடுக்கப்பட்டு, நான் பிரதரானால், கட்சி வேறுபாடின்றி கிரிமினல் பின்னணி உள்ள எம்.பி.க்களின் மீதான நிலுவை வழக்குகளை விரைந்து விசாரிக்க ஒரு கமிட்டியை அமைப்பதுதான் என் முதல் வேலையாக இருக்கும்.
நம் நாட்டை தாயும் மகனும் (சோனியா, ராகுல்) இணைந்து சீரழித்துவிட்டனர். உத்தரப் பிரதேசத்தை தந்தையும் மகனும் (முலாயம், அகிலேஷ் யாதவ்) சேர்ந்து சீரழித்துள்ளனர். இங்கு ஒரு பக்கம் தந்தையும் மகனும், என்றால் மறுபக்கம் சகோதரி (மாயாவதி). இவர்கள் எல்லோரும் தங்களது ஐந்தாண்டுகளை ஒருவருக்கு ஒருவர் பாடம் நடத்திக்கொள்வதிலே காலத்தை கழித்துவிட்டனர்.
பரம்பரை அரசியல் செய்வதிலும் வேண்டியவர்களுக்கு சலுகை அளிப்பதிலும், காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி கட்சிகளால்தான் முடியும். காங்கிரஸ், பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாடி ஆகிய கட்சிகள் இங்கு செல்வாக்கினை நிலைநாட்டியது போதும். பரம்பரை அரசியல் ஆட்சிக்கு முடிவுக் கட்டுவோம்.
இப்போது எனக்கு உங்களுக்காக சேவை செய்ய ஒரு வாய்ப்பு கொடுங்கள். அவர்கள் தங்களது வம்சத்தை வளர்த்து வேண்டியவர்களுக்கு சலுகை அளித்தது போதும். அவர்கள் தங்களது குடும்ப உறுப்பினர்களுக்குதான் அதிகாரத்தை தர நினைக்கின்றனர். சமூகத்தில் உள்ளோருக்கு அங்கீகாரம் தர நினைக்கவே இல்லை. குடும்பத்தினருக்கு நல்லது செய்வதும் தங்களது அத்தை மற்றும் மாமாக்களுக்கு வேண்டியதை நிறைவேற்றுவதும்தான் அவர்களுக்கு முக்கியமாக இருக்கிறது" என்றார் மோடி.