Published : 31 Jan 2015 08:47 AM
Last Updated : 31 Jan 2015 08:47 AM

சிறார் பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டம் குறித்து தமிழக காவல்துறைக்கு போதிய விழிப்புணர்வு இல்லை: பிருந்தா காரத்

சிறார் பாலியல் வன்கொடுமை தடுப்பு மற்றும் பாதுகாப்புச் சட்டம் (பாக்சோ) குறித்து தமிழக காவல்துறை அதிகாரிகளுக்கு விழிப்புணர்வு இல்லை என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசியல் தலைமைக் குழு உறுப்பினருமான பிருந்தா காரத் குற்றம் சாட்டியுள்ளார்.

கடந்த டிசம்பர் 25-ம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம் தேன் கனிக்கோட்டையில் 16 வயது மாற்றுத்திறனாளி சிறுமி 4 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட் டார். இந்த வழக்கில் விதிகளை மீறி செயல்பட்ட காவல்துறையினர் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து சிறுமிக்கு உடனே தீர்வு கிடைக்க செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு காவல்துறை தலைவர் அசோக் குமாரை பிருந்தா காரத் வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்து பேசினார்.

அதன் பிறகு பத்திரிகையாளர் களிடம் அவர் கூறியதாவது: பலாத்காரம் செய்யப்பட்ட வாய் பேச முடியாத, காது கேளாத சிறுமி 5 நாட்களுக்கு ரத்தம் படிந்த உடைகளுடன் மருத்துவமனையில் வைக்கப்பட்டு ஆறாவது நாள் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்படுகிறார். பாதிக்கப்பட்ட பெண் ஏழையாகவும், பின் தங்கிய சமூகத்தை சேர்ந்தவராகவும் இருப்பதால்தான் இது போன்ற, யோசித்து கூட பார்க்க முடியாத கொடுமைகள் நடக்கின்றன.

பாக்சோ சட்டத்தின் 5ஜி என்ற பிரிவின் கீழ் பாலியல் பலாத்காரத் துக்கான முயற்சி கூட பாலியல் பலாத்காரமாக கருதப்படும். ஆனால், இந்த சட்டத்தைப் பற்றி தமிழக காவல் துறையினருக்கு போதிய விழிப்புணர்வு இல்லாமல் சட்டத்தின் விதிமுறைகளை மீறியுள்ளனர். அவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 116-வது பிரிவின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட காவல்துறை அதிகாரிகளால் தமிழக காவல்துறை தலைவர் தவறாக வழிநடத்தப்பட்டிருக்கிறார்.

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் ஆகியோர் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோருடன் சேர்ந்து தமிழக காவல்துறை தலைவரிடம் இந்த சம்பவம் குறித்து ஏற்கெனவே மனு கொடுத்திருந்தனர். முன்னதாக சிறுமியின் பெற்றோர்களை பிருந்தா காரத் சந்தித்திருந் தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x