ஒபாமாவின் இந்தியப் பயணம்: காஷ்மீரில் பலத்த பாதுகாப்பு

ஒபாமாவின் இந்தியப் பயணம்: காஷ்மீரில் பலத்த பாதுகாப்பு
Updated on
1 min read

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் இந்தியப் பயணத்தை முன்னிட்டு ஜம்மு காஷ்மீரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

டெல்லியில் நாளை நடைபெறும் குடியரசு தின விழாவில் பங்கேற்பதற்காக ஒபாமா இன்று இந்தியா வருகிறார்.

இதையொட்டி காஷ்மீரில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, ஸ்ரீநகரில் உள்ள ராணுவப் படைப்பிரிவின் (15 கார்ப்ஸ்) லெப்டினன்ட் ஜெனரல் சுப்ரதா சஹா நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:

ஹபீஸ் சயீது தலைமையிலான ஜமாத் உத் தவா பயங்கரவாத அமைப்பை பாகிஸ்தான் தடை செய்திருப்பது முக்கிய நடவடிக்கை. என்றாலும் நடைமுறையில் இந்தத் தடை எவ்வாறு செயல்பாட்டுக்கு வருகிறது என்பதை அறிய நாங்கள் காத்துள்ளோம்.

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் இந்தியப் பயணத்தை முன்னிட்டு காஷ்மீரில் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுத்துள்ளோம். தாக்குதல் முயற்சிகளை தடுக்கவும் தயாராக உள்ளோம்.

பயங்கரவாதிகளுக்கு எதிராக பாதுகாப்பு படைகள் கடந்த ஆண்டு சிறப்பான வெற்றி பெற்றுள்ளன. எல்லை கட்டுப்பாட்டு கோட்டுக்கு அப்பால் 7 இடங்களில் 150 – 160 தீவிரவாதிகள் காஷ்மீருக்குள் ஊடுருவ காத்திருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஒபாமாவின் வருகையையொட்டி, பயங்கரவாதிகள் தாக்குதல் முயற்சி மேற்கொண்டால் அதை முறியடிக்கும் வகையில், காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் குறிப்பாக கோடைத் தலைநகரான ஸ்ரீநகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

குடியரசு தின விழா அமைதியாக நடைபெறுவதை உறுதிப்படுத்தவும், ஒபாமா இந்தியாவில் தங்கியிருக்கும் போது காஷ்மீரில் தாக்குதல் சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதை உறுதிப்படுத்தவும் முக்கிய பகுதிகளில் போலீஸார் மற்றும் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

காஷ்மீரில் தலைநகர் ஸ்ரீநகர் மற்றும் பிற முக்கிய நகரங்களின் அனைத்து எல்லைப் பகுதிகளிலும் சிறப்பு சோதனைச் சாவடிகள் அமைத்துள்ளோம். இங்கு வாகனத் தணிக்கை செய்வதுடன் சந்தேகப்படும் நபர்களை சோதனை செய்கிறோம்.

இரவு நேரங்களில் ரோந்துப் பணியை தீவிரப்படுத்துமாறு காவல் துறை மற்றும் பிற பாதுகாப்பு படையினரை கேட்டுக்கொண்டுள்ளோம். ஸ்ரீநகரில் குடியரசு தின விழா நடைபெறும் பக் ஷி மைதானத்தில் குறிபார்த்து சுடும் சிறப்பு படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

இதனிடையே காஷ்மீர் பிரச்சினைக்கு விரைந்து தீர்வுகாண வலியுறுத்தி, குடியரசு தினத்தை கருப்பு தினமாக அனுசரிக்குமாறு மக்களை பிரிவினைவாத அமைப்புகள் கேட்டுக்கொண்டுள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in