

மதம், ஜாதியின் பெயரில் மக்களை மோதவிட்டு ரத்தம் சிந்தவைக்கும் அரசியலை பாஜக நடத்தி வருகிறது என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
உத்தரகண்ட் தலைநகர் டேராடூனில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:
பாஜக தலைவர்கள் கண்களுக்கு ஆட்சிப் பீடத்தை தவிர வேறு எதுவும் தெரியவில்லை. எப்படி யாவது ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்று அவர்கள் திட்ட மிட்டுள்ளனர்.
அதற்காக மதம், ஜாதி, சமுதாயத்தின் பெயரில் மக்களிடம் பிரிவினையை ஏற்படுத்தி அவர்களை மோதச் செய்கின்றனர். ஆட்சியைப் பிடிக்க மக்களின் ரத்தத்தை தரையில் சிந்தவைக்கின்றனர். அதற்கு அவர்கள் தயங்குவதே இல்லை.
மக்களின் வேதனைகளை காங்கிரஸ் புரிந்துவைத்துள்ளது. ஒருவேளை சில எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியாமல் போயிருக்கலாம். ஆனால் தொலைநோக்குத் திட்டத்தில் நாட்டை வளர்ச்சிப் பாதையில் வழிநடத்திச் செல்லும் திறன் காங்கிரஸுக்கு மட்டுமே உள்ளது.
மோடி மீது தாக்கு
குஜராத் முதல்வர் செல்லும் இடமெல்லாம் ஊழலை எதிர்த்துப் பேசுகிறார். ஆனால் அவரது மாநிலத்தில் லோக் ஆயுக்தாவை அமைக்க அவர் முன்வரவில்லை. நீதிமன்றம் தலையிட்ட பின்னரே லோக்ஆயுக்தாவை ஏற்படுத் தினார்.
ஆனால் அதன்பின்னரும் லோக் ஆயுக்தா வரம்புக்குள் வராமல் குஜராத்தில் ஒரே ஒரு மனிதர் (மோடி) மட்டும் விதிவிலக்காக நிற்கிறார்.
மனத்தாழ்மையோடு மற்றவர் களுக்காக பணியாற்றுங்கள் என்று பகவத் கீதை கூறுகிறது. ஆனால் பாஜக தலைவர்கள் கீதையை படிப்பதே இல்லை.
புத்தரின் தத்துவங்களை யாரா லும் அழிக்க முடியாது, அசோகர், அக்பர் ஆகியோரையும் அழிக்க முடியாது. அதுபோல்தான் காங் கிரஸ். அந்தக் கட்சியை அழிக்க முடியாது.
நாங்கள் தேர்தல் களத்தில் போரிடுவோம், வெற்றி பெறுவோம். நிச்சயமாக மத்தியில் ஆட்சி அமைப்போம் என்றார் ராகுல் காந்தி.