ஜெயலலிதாவின் கோரிக்கை நிராகரிப்பு: மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை 5-ம் தேதிக்கு ஒத்திவைப்பு- கர்நாடக உயர் நீதிமன்றத்தில் 6 தனியார் நிறுவனங்கள் மனு தாக்கல்

ஜெயலலிதாவின் கோரிக்கை நிராகரிப்பு: மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை 5-ம் தேதிக்கு ஒத்திவைப்பு- கர்நாடக உயர் நீதிமன்றத்தில் 6 தனியார் நிறுவனங்கள் மனு தாக்கல்
Updated on
2 min read

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கின் மேல் முறையீட்டு மனு மீதான விசாரணையை வரும் 5-ம் தேதிக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

ஜெயலலிதா மீதான வழக்கின் மேல்முறையீட்டு மனு நேற்று விசாரணைக்கு வந்ததால் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நீதிபதி சி.ஆர்.குமாரசாமி விடுப்பில் இருந்ததால், நீதிபதி ஹெச்.பில்லப்பா முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் வழக்கறிஞர் பவானி சிங் ஆஜராகி வழக்கு விவரங்களை நீதிபதியிடம் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து ஜெயலலிதா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.குமார், “பல்வேறு காரணங்களால் வழக்கை வரும் 12-ம் தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்தார். இதனை நிராகரித்த நீதிபதி பில்லப்பா, விசாரணையை வரும் 5-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். அன்றைய தினம் சிறப்பு அமர்வு நீதிபதி சி.ஆர்.குமாரசாமி முன்பு விசாரணை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, சொத்துக் குவிப்பு வழக்கில் தொடர்புடைய ரிவர்வே அக்ரோ, ராமராஜ் அக்ரோ, மெடோ அக்ரோ, லெக்ஸ் பிராப்பர்ட்டீஸ், சைனோரா என்டர்பிரைசஸ், இன்டோ தோஹா கெமிக்கல்ஸ் உள்ளிட்ட 6 தனியார் நிறுவனங்கள் சார்பில் மேல்முறையீட்டு மனுக்களை வழக்கறிஞர் குலசேகரன் தாக்கல் செய்தார். இவ்வழக்கில் இணைக்கப்பட்டுள்ள 6 தனியார் நிறுவனங்களின் சொத்துக் களையும் உடனடியாக விடுவிக்குமாறு அதில் கோரப்பட்டுள்ளது.

அப்போது தங்களது மனுவுக்கு வலு சேர்க்கும் வகையில், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்கங்கள் அடங்கிய முக்கிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. இந்த மனுக்கள் மீதான விசாரணையும் ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு மனுவுடன் சேர்த்து விசாரிக்கப்படும் என வழக்கறிஞர்கள் தரப்பில் கூறப்படு கிறது.

ஜெ. வழக்கறிஞர்கள் மாயம்:

பெங்களூரு சிறப்பு நீதிமன்றத் திலும், கர்நாடக உயர் நீதிமன்றத் திலும் ஜெயலலிதா வழக்கு விசாரணைக்கு வரும்போது 100-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்களும், அதிமுக நிர்வாகிகளும் நீதிமன்றத்தில் கூடுவர். ஆனால் நேற்றைய விசாரணை யின்போது ஜெயலலிதா தரப்பில் வழக்கறிஞர்கள் பி.குமார், செந்தில், குலசேகரன் மற்றும் கர்நாடக மாநில அதிமுக செயலாளர் வா.புகழேந்தி மட்டுமே நீதிமன்றத்துக்கு வந்தனர்.

சொத்துக் குவிப்பு வழக்கை விசாரித்த பெங்களூரு சிறப்பு நீதிமன்றம், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடந்த செப்டம்பர் 27-ம் தேதி தீர்ப்பளித்தது.

கர்நாடக உயர் நீதிமன்றத்தில் 4 பேரும் ஜாமீன் மற்றும் மேல் முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்தனர். உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்த நிலையில் உச்சநீதி மன்றம் கடந்த அக்டோபர் 17-ம் தேதி ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு ஜாமீன் வழங்கியது.

கடந்த டிசம்பர் 18-ம் தேதி ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஹெச்.வஹேலாவுக்கு சில வழிகாட்டுதல்களை வழங்கியது.

அதன்படி சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க சிறப்பு அமர்வை அமைத்து அனுபவமிக்க தனி நீதிபதியை நியமிக்க வேண்டும். வழக்கின் விசாரணை நாள்தோறும் நடைபெற‌ வேண்டும்.ஜெயலலிதா தரப்பு வழக்கை மூன்று மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் எனக் கூறி 4 பேரின் இடைக்கால நிபந்தனை ஜாமீனை ஏப்ரல் 18-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது.

இந்நிலையில் கர்நாடக உயர் நீதிமன்ற பதிவாளர் ஆர்.கே.தேசாய், ஜெயலலிதா மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க சிறப்பு அமர்வு நீதிபதியாக சி.ஆர்.குமாரசாமி நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in