Published : 25 Jan 2015 10:09 AM
Last Updated : 25 Jan 2015 10:09 AM

இந்தியா வந்தார் ஒபாமா: டெல்லியில் மோடி நேரில் வரவேற்பு

இந்தியா - அமெரிக்கா இடையிலான அணுசக்தி ஒப்பந்தத்தை செயல்படுத்துவதில் கடந்த 7 ஆண்டுகளாக நீடித்து வந்த தடை நீங்கி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுடன் பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை மதியம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

சுமார் 3 மணி நேரம் நீடித்த இந்தச் சந்திப்புக்குப் பின், இரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டி அளித்தனர்.

அப்போது மோடி கூறும்போது, "கடந்த சில மாதங்களாக இந்திய - அமெரிக்க உறவில் புதிய எழுச்சியும் நம்பிக்கையும் ஏற்பட்டுள்ளது. இருதரப்பு உறவில் புத்துணர்ச்சி ஏற்பட்டுள்ளதாக உணர்கிறேன்.

குறிப்பாக, இருதரப்பு உறவில் அணுசக்தி ஒப்பந்தம் மையப்புள்ளியாக விளங்குகிறது. இது புதிய நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. மேலும், இந்த ஒப்பந்தம் புதிய பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கி உள்ளதுடன், சுத்தமான எரிசக்தியை உருவாக்க வேண்டும் என்ற எங்களது நோக்கத்தை விரிவுபடுத்துவதாக அமைந்துள்ளது.

அணுசக்தி ஒப்பந்தத்தை செயல்படுத்துவதில் நீடித்து வரும் தடையை நீக்க கடந்த 4 மாதங்களாக இரு நாடுகளும் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றன. இது தொடர்பாக ஒப்பந்தம் ஏற்பட்டு 7 ஆண்டுகளுக்குப் பிறகு, வர்த்தக ரீதியாக ஒத்துழைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பான சட்டத்துக்கு உட்பட்டு தொழில்நுட்ப மற்றும் வர்த்தக ரீதியாக ஒருங்கிணைந்து செயல்படுவது எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு ஒத்துழைப்பு, தீவிரவாத எதிர்ப்பு...

பாதுகாப்புத் துறை தொடர்பான ஒத்துழைப்பை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்வது குறித்து ஆலோசித்தோம். குறிப்பிடத்தக்க அதிநவீன ராணுவ தளவாடங்களை இணைந்து உருவாக்குவது மற்றும் தயாரிப்பது என கொள்கை அளவில் நாங்கள் ஒப்புக் கொண்டுள்ளோம்.

உலகின் மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருந்து வரும் தீவிரவாதத்தை ஒடுக்குவது தொடர்பாக சர்வதேச அளவிலான ஒருங்கிணைந்த நடவடிக்கை மேற்கொள்வது குறித்து ஆலோசித்தோம். தீவிரவாதத்தை ஒடுக்கவும், தீவிரவாதிகளை நீதியின் முன் நிறுத்தவும் ஒவ்வொரு நாடும் தாங்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். தொழில்நுட்ப ரீதியாக தீவிரவாதத்தை எதிர்த்துப் போரிடுவது தொடர்பாக இரு நாடுகளும் இணைந்து செயல்பட்டு வருகின்றன. இந்த ஒத்துழைப்பை மேம்படுத்தப்படும்.

அமெரிக்காவில் வசித்து வரும் பல்லாயிரக்கணக்கான இந்தியர்களின் நலனுக்காக சமூக பாதுகாப்பு ஒப்பந்தம் மேற்கொள்வது தொடர்பான பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவது என முடிவு எடுக்கப்பட்டது. இவ்வாறு மோடி தெரிவித்தார்.

பராக் ஒபாமா விருப்பம்

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறும்போது, "இரு நாடுகளுக்கிடையிலான அணுசக்தி ஒப்பந்தத்தை முன்னெடுத்துச் செல்வது மற்றும் ஒப்பந்தத்தை செயல்படுத்துவது தொடர்பாக உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இருதரப்பு உறவை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்வதற்கு இரு நாடுகளும் எத்தகைய முயற்சியை மேற்கொண்டு வருகின்றன என்பதை எடுத்துக் காட்டுவதாக இது உள்ளது.

இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தகம் 60 சதவீதம் உயர்ந்து ரூ.6.2 லட்சம் கோடியாகி உள்ளது. இதை மேலும் உயர்த்த வேண்டும் என்று விரும்புகிறேன்.

இந்தியர்கள் அனைவருக்கும் வங்கிக் கணக்கு தொடங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருவதாகவும், சுத்தமான தண்ணீர், காற்று ஆகியவற்றை வழங்க உறுதி பூண்டுள்ளதாகவும் மோடி தெரிவித்தார். இந்த முயற்சிக்கு ஒத்துழைப்பு தர விரும்புகிறோம்" என்றார் பராக் ஒபாமா.

இந்தியா - அமெரிக்கா இடையிலான அணுசக்தி ஒப்பந்தத்தை செயல்படுத்துவதில் கடந்த 7 ஆண்டுகளாக நீடித்து வந்த தடை நீங்கி உள்ளது. எனினும், இந்த விஷயத்தில் முக்கிய தடைக்கல்லாக உள்ள அணுசக்தி இழப்பீட்டு சட்டத்தின் பொறுப்புடைமை அம்சம் தொடர்பான பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வு காணப்படும் என்பது தெரியவில்லை.

முந்தைய ரிப்போர்ட்:

அணுசக்தி உடன்பாடு: ஒபாமாவுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை

இந்தியப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுடன், பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை மதியம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அமெரிக்க அதிபர் ஒபாமாவும், பிரதமர் நரேந்திர மோடியும் ஹைதராபாத் இல்லத்தில் முக்கிய பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். ஒபாமாவுக்கும் அவரது குழுவினருக்கும் பிரதமர் மோடி மதிய விருந்து அளித்தார்.

பாதுகாப்பு, சர்வதேச தீவிரவாதம், இருதரப்பு வர்த்தகம், அணுசக்தி உடன்பாடு, பருவநிலை மாறுபாடு, ஆப்கானிஸ்தான் அரசியல் நிலவரம், பாகிஸ்தான் தீவிரவாதிகள் விவகாரம் உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து இரு தலைவர்களும் விரிவாக ஆலோசனை நடத்தினர்.

அணுசகதி உடன்பாடு விவகாரத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணும் வகையில், இந்தப் பேச்சுவார்த்தை அமைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த விவகாரத்தில், அமெரிக்காவுடன் இணைந்து அதிமுக்கியத்துவடன் செயல்படுவதற்கு இந்தியா விருப்பம் தெரிவித்துள்ளதாக அவர்கள் குறிப்பிட்டனர்.

மோடி வரவேற்பு

முன்னதாக, அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.45 மணியளவில் இந்தியா வந்தார். டெல்லியில் அவரை பிரதமர் நரேந்திர மோடி நேரில் வரவேற்றார்.

இதைத் தொடர்ந்து மதியம் 12 மணி அளவில் குடியரசுத் தலைவர் மாளிகையில் அதிபர் ஒபாமாவுக்கு அரசு முறைப்படி சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

டெல்லியில் திங்கள்கிழமை நடைபெறும் குடியரசு தின விழாவில் அமெரிக்க அதிபர் ஒபாமா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கிறார். இதற்காக அவரும் அவரது மனைவி மிஷேலும் மேரிலேண்டில் உள்ள ஆண்ட்ரூ விமானப் படை தளத்தில் இருந்து 'ஏர் போர்ஸ் ஒன்' விமானத்தில் நேற்று இந்தியா புறப்பட்டனர். அவர்களுடன் மூத்த அமைச்சர்கள், தொழிலதிபர்கள், பாதுகாப்பு அலுவலர்கள் உள்ளிட்ட உயர்நிலைக் குழுவும் புறப்பட்டனர்.

டெல்லியில் இன்று காலை 9.45 மணியளவில் டெல்லி பாலம் விமான நிலையத்துக்கு அவர்கள் வந்து சேர்ந்தனர். அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவை, பிரதமர் நரேந்திர மோடி கட்டியணைத்து வரவேற்றார்.

மாலையில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அளிக்கும் விருந்தில் ஒபாமா கலந்துகொள்கிறார். அப்போது இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குடியரசு தின விழா

இதையடுத்து, நாளை காலை டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் ஒபாமா சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். சுமார் 2 மணி நேரம் நீடிக்கும் நிகழ்ச்சிகளை அவர் பார்வையிடுகிறார். அப்போது குண்டு துளைக்காத சிறப்பு அரங்கில் ஒபாமா அமர்ந்திருப்பார் என்றும் அவருடன் நரேந்திர மோடி, பிரணாப் முகர்ஜி ஆகியோரும் இருப்பார்கள் என்றும் டெல்லி பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தொழிலதிபர்களுடன் சந்திப்பு

நாளை மாலையில் நடைபெறும் அமெரிக்க, இந்திய தொழில் கவுன்சில் கூட்டத்தில் ஒபாமாவும் நரேந்திர மோடியும் உரையாற்றுகின்றனர்.

டெல்லியில் பலத்த பாதுகாப்பு

ஒபாமாவின் வருகையையொட்டி மத்திய டெல்லியில் பாதுகாப்பு கடுமையாக்கப் பட்டுள்ளது. 71 கட்டிடங்கள் முழுமையாக மூடப்பட்டுள்ளன. இந்த பகுதிக்குள் எம்பிக்கள், ராணுவ அதிகாரிகள் உட்பட யாரும் எளிதில் நுழைய முடியாது. சிறப்பு பாஸ்களை காட்டினால் மட்டுமே அனுமதி அளிக்கப்படும். சிறப்பு கட்டுப்பாட்டு அறையில் இருந்தவாறு அமெரிக்க உளவுப்படை அதிகாரிகளும் மத்திய பாதுகாப்புப் படை அதிகாரிகளும் குடியரசு தின விழாவை கண்காணிக்க உள்ளனர்.

டெல்லியை சுற்றி சுமார் 400 கி.மீ. சுற்றளவுக்கு விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துமீறி விமானங்கள் நுழைந்தால் அதை சுட்டுத் தள்ள பீரங்கிகள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. விழா நடைபெறும் டெல்லி ராஜபாதையில் 7 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக 80 ஆயிரம் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x