

உத்தரப் பிரதேசம் மாநிலம் லக்னோ, உனானோ மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 27-ஆக அதிகரித்துள்ளது.
லக்னோ, உனானோ மாவட்டங்களில் நேற்று மாலை சாராயம் குடித்த பலர் அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். நேற்று ஒரே நாளில் 13 பேர் பலியாகி நிலையில் இன்று மேலும் 14 பேர் இறந்தனர்.
இன்று மட்டும் வெவ்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்த 13 பேர் பலியாகினர். 100-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கள்ளச்சாராய மரணம் குறித்து லக்னோ மருத்துவ அதிகாரி கூறுகையில், "இதுவரை கிங் ஜார்ஜ் மருத்துவ பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களில் 12 பேர், பல்ராம்பூர், மஹிலாபாத் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களில் தலா இருவர், ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களில் ஒருவர், உனானோவில் 7 பேர், மற்ற இடங்களில் மூன்று பேர் என மொத்தம் 27 பேர் பலியாகியிருக்கின்றனர். சிகிச்சை பெற்றுவருபவர்களில் 10 பேரது நிலை கவலைக்கிடமாக உள்ளது" என தெரிவித்தார்.