

மணவாழ்க்கை அமையாமல் தவிக்கும் பாகிஸ்தான் இந்துப் பெண்களை மணக்க உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் இளைஞர்கள் முன்வந்துள்ளனர்.
உ.பி. மீரட் மாவட்டத்தில் உள்ளது மிராக்பூர். கிரிமினல் நட வடிக்கைகளுக்கு பெயர் போன இந்தப் பகுதியில் குர்ஜர் சமூகத்தி னர் அதிகமாக வாழும் மீராக்பூர் கிராமம் மட்டும் மிகவும் வித்தியாச மானதாக உள்ளது. இங்கு குடிப்பழக்கம் கொண்டவர்கள் யாரும் கிடையாது எனவும், அசைவம் உண்பவர்களும் இல்லை என்று கூறப்படுகிறது.
பாகிஸ்தானில் வாழும் இந்துப் பெண்களின் பரிதாப நிலையைக் கேள்விப்பட்ட இக்கிராம இளைஞர் கள், அப்பெண்களை வரதட்சணை இன்றி மணக்க முன்வந்துள்ளனர். இதற்காக, பஞ்சாப் மாநிலம் அமிருதசரஸைச் சேர்ந்த எழுத்தாளர் சுரேந்தர் கோச்சட் என்பவரிடம் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள், தங்கள் பெயரைப் பதிவு செய்துள்ளனர்.
இது குறித்து ‘தி இந்து’விடம் சுரேந்தர் கோச்சட் கூறியதாவது: பாகிஸ்தானில் இந்துக்கள் 5.5 சதவீதம் வசிக்கின்றனர்.
இந்துக்கள் தங்களது பெண் களுக்கு திருமணம் செய்துவைப் பதில் பெரும் இன்னலுக்கு ஆளாகின்றனர். தங்கள் பெண்களை கட்டாய மதமாற்றம் செய்து முஸ்லிம்களுக்கு மணமுடித்து தர வேண்டிய சூழல் நிலவுகிறது.
பாகிஸ்தானின் உச்ச நீதிமன்றத்தில் நடந்து வரும் ஒரு பொதுநல வழக்கின் மனுவில், கடந்த மூன்று வருடங்களில் 1,120 பெண்கள், கட்டாயமாக அல்லது வேறு வழியின்றி இஸ்லாம் மதத்தை தழுவி இருப்பதாக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு மதம் மாறி மணம் முடிக்கும் பெண்களை அவர்கள் குடும்பத்தார் மற்றும் கிராமத்தினர் முஸ்லிம்களாக ஏற்க முன் வருவதில்லை. இதனால், பல இளம் இந்து பெண்களின் வாழ்க்கை சீரழிகிறது.
உதாரணமாக, கராச்சியின் கசாய் பஜாரில் விபச்சார விடுதியாக மாறிவிட்ட, முகலாயர் காலத்து நடன விடுதியான ஹீராமண்டியில் இன்று சிக்கியுள்ள பெண்களில் பெரும் பாலானவர்கள் இந்துக்களே.
இந்த நிலை ஏற்படாமல் பாகிஸ்தானிய இந்துப் பெண்களை மணமுடித்து நல்ல மணவாழ்க்கை அளிக்க மீராக்பூர் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களின் 130 இளைஞர்கள் முன் வந்திருப்பது மிகவும் பாராட்டத்தக்கது.
இந்த இளைஞர்களில் பலர் மருத்துவம் மற்றும் பொறியியல் உள்ளிட்ட பட்டப்படிப்புகள் பயின் றவர்கள். இவர்களை பாகிஸ்தானியப் பெண்களுடன் மணமுடிக்கும் பணி யில் என்னுடன் இணைந்து பணியாற்ற நல்ல பொதுநல அமைப்புகளையும் தேடி வருகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பாகிஸ்தானில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க சீக்கிய வழிபாட்டுத் தலங்களை பற்றி எழுதுவதற்காக கோச்சட் பலமுறை பாகிஸ்தான் சென்றுள்ளார். அவர் 18 நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.
தற்போது, பாகிஸ்தானில் இன்னல்களைச் சந்தித்து வரும் இந்துக்களை பாதுகாக்கும் முயற்சி யில் ஈடுபட்டுள்ளார்.
இவரது நற்பணிக்கு ஆதர வளிக்கும் வகையில், மிராக்பூரின் அருகிலுள்ள மற்றொரு கிராமமான சந்தேனா கோலிவாசிகள், பாகிஸ்தானிய இந்துப் பெண்களை மணமுடிப்பவர்களுக்கு இலவசமாக வீடுகளை கட்டித் தருவதாக அறிவித்துள்ளனர்.