Last Updated : 24 Jan, 2015 08:25 AM

 

Published : 24 Jan 2015 08:25 AM
Last Updated : 24 Jan 2015 08:25 AM

சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுதலையாக ஆயிரம் மணி நேரம் செலவிட்டுள்ளேன்: உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் நாகேஸ்வர ராவ் பேட்டி

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தினந்தோறும் அனல் பறக்கிறது.

கடந்த 18 ஆண்டுகளாக இவ்வழக்கில் சிக்கி தவிக்கும் ஜெயலலிதாவை மீட்பதற்காக நாட்டின் முக்கிய வழக்கறிஞர்களில் ஒருவரும், முன்னாள் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலு மான நாகேஸ்வர ராவ் களமிறக்கப்பட்டுள்ளார்.

அடுக்கடுக்கான ஆதாரங்களை யும், இதுவரை சொல்லாத புதிய தரவுகளையும் நாகேஸ்வர ராவ் தனது வாதத்தின்போது எடுத்துரைத்தார். அவரை `தி இந்து' சார்பாக சந்தித்தோம். அவர் அளித்த சிறப்பு பேட்டி:

ஜெயலலிதாவின் வழக்கில் 8 நாட்கள் இறுதி வாதம் நிகழ்த்தி யுள்ளீர்கள். உங்களுடைய வாதம் திருப்திகரமாக இருந்ததா?

கடந்த 8 நாட்களில் 40 மணி நேரத்துக்கும் மேலாக 10 நிமிடம் கூட இடைவேளை எடுத்துக்கொள்ளாமல் வாதிட்டுள்ளேன். எனது கவனத்துக்குக் கொண்டுவரப்பட்ட ஆவணங்களைக் கொண்டு திருப்திகரமாக வாதிட்டுள்ளேன். இதற்காக பல நாட்கள் இரவு பகலாக ஓயாமல் உழைத்திருக்கிறேன். இதில் எனது தனிப்பட்ட உழைப்பு மட்டுமல்லாமல், எனது உதவி வழக்கறிஞர்கள் 12 பேரின் கடும் உழைப்பும், ஏற்கெனவே இவ்வழக்கில் ஆஜரான வழக்கறிஞர்களின் உழைப்பும் அடங்கி இருக்கிறது.

சொத்துக்குவிப்பு வழக்கில் உங்களுக்கு முன்பாக மூத்த வழக்கறிஞர்கள் ராம்ஜெத் மலானி, ஃபாலி நரிமன், பி.குமார் உள்ளிட்ட பலர் வாதிட்டுள்ளார்கள். அவர்களுடைய வாதத்தில் இருந்து உங்களுடைய வாதம் எந்த விதத்தில் வேறுபட்டதாக அமைந்திருக்கிறது?

ராம் ஜெத்மலானி, நரிமன் எல்லாம் பெரிய மனிதர்கள். அவர்களுடைய வாதம் குறித்து எதுவும் கூற முடியாது. என்னுடைய அறிவுக்கு எட்டிய முக்கிய குறிப்புகளைக் கொண்டும், வழக்கில் உள்ள ஆவணங்களைக் கொண்டும் மிக தெளிவாக வாதிட்டுள்ளேன்.

எங்களுக்கு சாதகமான பல உச்ச நீதிமன்ற உத்தரவுகளை மேற்கோள் காட்டியதை நீதிபதி கவனமாக கேட்டுக் கொண்டார்.

உங்களுடைய 40 மணி நேர வாதத்தில், விசாரணை நீதிமன்றத்தில் குறிப்பிடப்படாத முக்கிய தகவல்கள் என்னென்ன?

விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்ற வாதம் குறித்து நான் எதுவும் கூறமுடியாது. ஜெயலலிதாவுக்கு சாதகமாக வந்த வருமான வரித் துறை தீர்ப்பாயத்தின் ஆணைகள், சொத்துகள் மதிப்பிட்டதில் உள்ள குளறுபடிகள், நமது எம்ஜிஆர் செய்தித்தாளின் வருமானம், ஹைதராபாத் திராட்சை தோட்ட வருமானம் உள்ளிட்டவை பற்றி ஆதாரங்களுடன் குறிப்பிட்டேன். குறிப்பாக இறுதி நாளில் (வெள்ளிக்கிழமை) தாக்கல் செய்த ஜெயலலிதாவின் சொத்து பட்டியலில் பல முக்கிய தகவல்களை இணைத்துள்ளேன். என்னுடைய வாதம் இன்னும் முடிவடையவில்லை. அரசு தரப்பின் வாதம் முடிந்த பிறகு, இறுதியாக 2 மணி நேரம் வாதிட திட்டமிட்டுள்ளேன். அப்போது இன்னும் பல முக்கிய தகவல்களை தெரிவிப்பேன்.

உச்ச நீதிமன்றம் இவ்வழக்கை முடிக்க நிர்ணயித்த 3 மாத கால அவகாசத்துக்குள் வழக்கை முடிக்க முடியுமா?

அதுபற்றி எனக்கு தெரியாது. சிறப்பு அமர்வு நீதிமன்றத்தைதான் கேட்க வேண்டும்.

சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டில் 3-ம் தரப்பாக சேர்க்குமாறு திமுக பொதுச்செயலாளர் அன்பழகன், சுப்பிரமணியன் சுவாமி ஆகியோர் கோரி வருகிறார்களே?

மேல்முறையீடு என்பது முந்தைய தீர்ப்புக்கும் மனுதாரருக்குமான பிரச்சினை. இதில் மற்றவர்களை மூன்றாம் தரப்பாக சேர்ப்பது பற்றி நீதிபதிதான் முடிவு செய்ய வேண்டும்.

உங்களுடைய வாதம் ஜெயலலிதாவை இவ்வழக்கிலிருந்து விடுதலை செய்யும் என உறுதியாக நம்புகிறீர்களா?

ஜெயலலிதா விடுதலையாக வேண்டும் என்பதற்காகத்தான் வேண்டுதலைப்போல ஆயிரம் மணி நேரத்துக்கும் மேலாக செலவிட்டுள்ளேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x