Last Updated : 14 Jan, 2015 08:08 PM

 

Published : 14 Jan 2015 08:08 PM
Last Updated : 14 Jan 2015 08:08 PM

நடப்பு ஆட்சிக்காலத்திற்குள் கங்கை சுத்தம் செய்யப்பட்டு விடுமா? - உச்ச நீதிமன்றம் கேள்வி

கங்கை நதியைத் தூய்மைப் படுத்தும் திட்டம் குறித்து, ‘நடப்பு ஆட்சிக் காலத்தில் பணியை நிறைவேற்றி விடுவீர்களா என்று உச்ச நீதிமன்றம் கே:ள்வி எழுப்பியது.

கங்கை நதியைத் தூய்மைப்படுத்தும் விவகாரத்தில் இதுவரை அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன, அதனால் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றங்கள் என்ன என்பவை குறித்து உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

கங்கையைச் சுத்தப்படுத்துவது பாரதிய ஜனதா கட்சி அரசின் முக்கியத் திட்டங்களில் ஒன்றாகும். ஆனால் இந்தத் திட்டத்துக்காக கங்கைக் கரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்படும் கட்டிடப் பணிகளை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதற்கு பதிலளிக்கும் விதத்தில், இந்தத் திட்டத்தை குறுகிய காலம், மத்திம காலம் மற்றும் நீண்ட காலம் என மூன்றாகப் பிரித்து ஒவ்வொரு காலங்களிலும் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து அறிக்கை ஒன்றை நீதிமன்றத்திடம் சமர்ப்பித்தது. குறுகிய காலம் என்பது மூன்றாடுகள் கொண்டதாகவும், மத்திம காலம் என்பது ஐந்தாண்டுகள் கொண்டதாகவும், நீண்ட காலம் என்பது பத்தாண்டுகள் மற்றும் அதற்கும் மேலானதாக இருக்கும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

அதை வரவேற்ற நீதிமன்றம், தன் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு அரசு மேற்கொண்டுள்ள முயற்சிகள் என்ன என்று கேள்வி எழுப்பியது. அதற்கு பதிலளித்த அரசு, கங்கைக் கரையில் உள்ள 118 நகரங்களில் முழுமையான தூய்மைக்கு கழிவு நீர் மற்றும் திடக் கழிவு மேலாண்மை ஆகியவற்றைச் செயல்படுத்துவதுதான் தங்களின் முதல் இலக்கு என்று கூறியது.

இந்நிலையில் இந்த வழக்கு, நீதியரசர்கள் டி.எஸ்.தாக்கூர், ஆர்.கே.அகர்வால் மற்றும் ஏ.கே.கோயல் ஆகியோரடங்கிய அமர்வின் முன்பு வந்தது.

அப்போது அதை விசாரித்த நீதிபதிகள், "கங்கையைச் சுத்தப்படுத்தும் திட்டம் என்பது கடந்த 30 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. ஆனால் நிஜத்தில் ஒரு முன்னேற்றம் கூட தட்டுப்படவில்லை. உங்களுக்கு நிதிப் பற்றாக்குறை இருந்தால் அதற்கு நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது. உங்கள் திட்டங்களை நீங்கள் மேற்கொள்ளும்போது ஏதேனும் தடைகள் வந்தால் எங்களிடம் வாருங்கள். பொதுநல வழக்கை உங்கள் திட்டத்துக்கு எதிரானதாகக் கருத வேண்டாம். இந்தப் பணி இந்த ஆட்சியில் முடியுமா அல்லது ஆட்சியின் இரண்டாவது கட்டத்தில் முடியுமா?" என்று கேள்வி எழுப்பினர்.

முன்னதாக, கங்கைக் கரையை ஒட்டியுள்ள ஐந்து மாநிலங்களில் அமையவிருக்கும் 70 சுத்திகரிப்பு மையங்கள் குறித்து கூடுதல் தகவல்களைக் கோரியதுடன், ஒவ்வொரு மாநிலத்திலும் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்த தகவல்களையும் கேட்டிருந்தது.

மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித் குமார் இதற்கு பதிலளித்துப் பேசும்போது, "திட்டமிட்டபடி அனைத்து காரியங்களும் நடைபெற்று வருகின்றன. 118 நகரங்களை அடையாளம் கண்டுள்ளோம். அந்த நகரங்களில் உள்ள நகராட்சிகள் மற்றும் இதர அதிகாரிகளை விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளோம். 2018ம் ஆண்டில் பணிகள் நிறைவடையும்" என்றார்.

இதைத் தொடர்ந்து உத்தராகண்ட், உத்தரப் பிரதேசம், பிஹார், ஜார்க்கண்ட் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் அரசு எடுத்துள்ள மாநில வாரியான நடவடிக்கைகள் குறித்து ஆறு வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும் 15 கழிவுநீர் சுத்திகரிப்பு மையங்கள் அமைப்பதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் அறிவிப்பது குறித்தும் தகவல்களைக் கேட்டுள்ளது. ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பதில் தாமதங்கள் ஏதேனும் இருந்தால் அதற்கான காரணங்களையும் குறிப்பிட வேண்டும் என்று நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

தவிர, நாட்டின் ஏழு ஐ.ஐ.டி.க்கள் இணைந்து தயாரிக்கும் அறிக்கையில் கோமுக் முதல் உத்தரகாசி வரை உள்ள 100 கிமீ தொலைவிலான சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் தகவல்கள் இருக்க வேண்டும் என்றும், அந்த அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறி உத்தரவிட்ட நீதிபதிகள் இந்த வழக்கை ஆறு வாரங்களுக்குத் தள்ளி வைத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x