

டெல்லி சட்டப்பேரவைத் தேர் தலில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் பணம் கொடுத்தால் வாங்கிக் கொள்ளுங்கள், ஆனால் ஆம் ஆத்மிக்கு வாக்களியுங்கள் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால் பேசி சர்ச்சையில் சிக்கி உள்ளார். மேற்கு டெல்லியின் நவாடா பகுதியில் உத்தம் நகர் சட்டப்பேரவை தொகுதி ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் நரேஷ் பால்யனுக்கு ஆதரவாக நேற்று நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் கேஜ்ரிவால் பேசியதாவது:
இது தேர்தல் நேரம். வாக்களிப்பதற்காக காங்கிரஸும் பாஜகவும் உங்களுக்கு பணம் (லஞ்சம்) தர முன்வருவார்கள். 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல் மற்றும் நிலக்கரி சுரங்க ஊழல் மூலம் கொள்ளையடிக்கப்பட்ட பணம்தான் அவை. எனவே, அதை வேண்டாம் என்று மறுக்காமல் பெற்றுக் கொள்ளுங்கள். ஆனால் உங்கள் வாக்குகளை ஆம் ஆத்மி கட்சிக்கு செலுத்துங்கள்.
கடந்த 65 ஆண்டுகளாக நம்மை ஏமாற்றி வந்த அவர்களுக்கு சரியான பாடம் புகட்ட இது தான் சரியான தருணம். பிரதமர் நரேந்திர மோடி சில தினங்களுக்கு முன்பு ராம் லீலா மைதானத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்தார். அவரிடம் மக்கள் நிறைய எதிர்பார்த்தனர்.
ஆனால் அவரது உரையில் என்னைப்பற்றிதான் அதிகம் பேசினார். இதுபோன்ற அரசியல் நாட்டுக்கு நல்லதல்ல. அரசியல் என்பது பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். இவரது சர்ச்சைக்குரிய பேச் சுக்கு காங்கிரஸ் மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.