Last Updated : 16 Jan, 2015 11:30 AM

 

Published : 16 Jan 2015 11:30 AM
Last Updated : 16 Jan 2015 11:30 AM

மதுராவில் அதிகரித்து வரும் குரங்குகள் தொல்லை: கட்டுப்படுத்த ஹேமாமாலினி எம்.பி. முயற்சி

உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவில் அதிகரித்து வரும் குரங்கு தொல்லையை சமாளிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் பாஜக எம்பியும் நடிகையுமான ஹேமாமாலினி.

மாநிலத்தின் தெய்வீக நகரங்களில் ஒன்றான மதுரா மற்றும் அதன் அருகில் உள்ள பிருந்தாவனிலும் குரங்குகள் தொல்லை மிகவும் அதிகம். அன்றாடம் இங்கு வரும் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு தொல்லை தரும் குரங்குகளை சமாளிக்க பல்வேறு வகை முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆனாலும் பலன் கிடைக்காததால், அவற்றுக்கு குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சை செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக அனுமதி கேட்டு மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு அந்த தொகுதியின் எம்பியான ஹேமாமாலினி எழுதியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, “குரங்குகள் தொல்லையிலிருந்து பொதுமக்களை காப்பற்றுவதற்கு ஒரே வழி அவற்றுக்கு குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சை செய்வதுதான். இந்து மதத்தில் குரங்குகளை ஹனுமனின் அவதாரமாகக் கருதி தெய்வீக ஸ்தானத்தில் பார்க்கப்படுகிறது. எனவே, அவற்றை இடம் மாற்றுவதால் அதன் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடியாது. இதுகுறித்து அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரை நேரில் சந்தித்துப் பேச உள்ளேன்” என தொகுதிவாசிகளிடம் உறுதி அளித்துள்ளார்.

மாற்று வழி தேவை

இதுகுறித்து பிரிஜ் மண்டல கலாச்சார சின்னங்கள் பாதுகாப்பு அமைப்பின் செயலாளர் பிரிஜ் கண்டல்வால், ‘தி இந்து’விடம் கூறும்போது, “குரங்குகளுக்கு ஏதேனும் அறுவை சிகிச்சை செய்தால் அந்த இடத்தில் சொரிந்து பெரிய புண்ணாக ஆக்கிக் கொள்கின்றன. இதனால் இமாச்சல பிரதேச மாநிலத்தில் குரங்குகளுக்கு குடும்பக் கட்டுப்பாடு செய்யும் முயற்சி தோல்வி அடைந்தது. இதற்கென மருந்து உள்ளது. ஆனால் அதை குட்டிக் குரங்குகள் உண்டால் மரணம் ஏற்படும் ஆபத்து உள்ளது. எனவே குரங்குகள் தொல்லைக்கு மத்திய அரசு மாற்று வழியைக் கண்டுபிடிக்க வேண்டும்” என்றார்.

குரங்கை விரட்டிய லங்கூருக்கு தடை

குரங்குகளை விரட்ட டெல்லியைப் போல் மதுராவிலும் லங்கூர் வகையைச் சேர்ந்த வால் நீளமுள்ள முகமுடி குரங்குகளின் உதவி நாடப்பட்டு வந்தது. இதையும் எதிர்த்து சிலர் நீதிமன்றத்தை அணுகியதால் அதற்கு தடை விதிக்கப்பட்டது. சுமார் ஒரு லட்சம் மக்கள் தொகை கொண்ட பிருந்தாவனில் குரங்குகள் எண்ணிக்கை பத்தாயிரத்திற்கும் அதிகமாக இருப்பதாகவும், அவற்றை சரியாக கணக்கிடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஹேமாமாலினியிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x