

மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடுமாறு அக்கட்சியின் மூத்த தலைவர் அத்வானி அழைப்பு விடுத்ததாக கிரண்பேடி கூறியுள்ளார்.
ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி யான கிரண்பேடி, ஊழலுக்கு எதிரான அண்ணா ஹசாரேவின் போராட்டத்தில் அர்விந்த் கேஜ்ரிவால், பிரசாந்த் பூஷன் உள்ளிட்டோருடன் இணைந்து பங்கேற்றார். அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சி உருவான பிறகும் அண்ணா ஹசாரேவுடன் நீடித்து வந்தார்.
இந்நிலையில் அண்மையில் திடீரென பாஜகவில் இணைந்த அவர், அக்கட்சியின் டெல்லி முதல்வர் வேட்பாளராகவும் அறி விக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் டெல்லி ஆதார்ஷ் நகரில் நேற்று பிரச் சாரம் செய்த கிரண்பேடி, “மக்களவை தேர்தலின்போது என்னிடம் தனிப்பட்ட முறையில் பேசிய அத்வானி, பாஜக சார்பில் டெல்லியில் போட்டியிடுமாறு கோரினார். ஆனால் இதற்கு நான் மறுத்துவிட்டேன். அதேபோல் டெல்லியில் ஐபிஎஸ் அதிகாரியாக நான் பணியாற்றியபோது, அரசி யலில் இணைந்து தங்கள் கட்சி சார்பில் அமிர்தசரஸ் தொகுதியில் போட்டியிடுமாறு காங்கிரஸ் அழைத்தது. அப்போதும் மறுத்துவிட்டேன். ஆம் ஆத்மி கட்சியும் தங்கள் கட்சியில் இணைந்து தேர்தலில் போட்டியிடுமாறு பத்திரிகைகள் வாயிலாக அழைப்பு விடுத் திருந்தது. இதற்கு நான் பதில் அளிக்கவில்லை” என்றார்.
டெல்லி முன்னாள் முதல்வரான கேஜ்ரிவால் குடியரசு தின விழாவில் தனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று புகார் கூறியிருந்தார். இதற்கு பதில் அளித்த கிரண்பேடி, “டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி 49 நாள் நடத்தியது அரசல்ல, வெறும் போராட்டம் தான். மேலும் குடியரசு தினத்துக்கு விழா நடத்துவது வீண் செலவு என்று கேஜ்ரிவால் ஒருமுறை கூறியிருந்தார்” என்று விமர்சனம் செய்தார்.
டெல்லி முதல்வர் வேட்பாளராக போட்டியிட பாஜக அழைத்தபின் அரசியலில் குதித்துள்ள கிரண்பேடி, இங்கு கிருஷ்ணா நகர் தொகுதியில் போட்டியிடுகிறார்.