Published : 03 Jan 2015 11:41 AM
Last Updated : 03 Jan 2015 11:41 AM
ரயில்வே துறையில் முக்கிய நடவடிக்கையாக, டெண்டர் நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் முடிவு எடுப்பதை விரைவுபடுத்தும் வகையில் இந்த நடவடிக்கைகளில் இருந்து ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு விலகிக்கொண்டுள்ளார்.
ரயில்வே மண்டலங்கள் மற்றும் உற்பத்தி பிரிவுகளின் தலைவர்களே முடிவுகளை எடுக்கும் வகையில் அவர்களுக்கு அதிகாரம் வழங்கியுள்ளார்.
ரயில்வே துறையில் டெண்டர்கள் மீது முடிவு எடுப்பதில் தற்போது அதிக காலதாமதம் ஆகிறது. இந்நிலையில் அமைச்சரின் இந்த உத்தரவு ரயில்வே நிதி நிர்வாக சீர்திருத்தத்தில் முதல் மற்றும் முக்கிய நடவடிக்கையாக கருதப்படுகிறது.
டெண்டர் இறுதி செய்யும் பணிகளை இனி ரயில்வே மண்டலங்களும், உற்பத்தி பிரிவு களுமே மேற்கொள்ளும். இதற்காக ரயில்வே பொது மேலாளர் கள் மற்றும் உற்பத்தி பிரிவின் தலைமை இயக்குநர்களுக்கு முழு அதிகாரம் தரப்பட்டுள்ளது.
ரயில்வே ஸ்டோர்ஸ் மற்றும் பணிகள் தொடர்பான டெண்டர்களை ரயில்வே வாரியமே கோரும். இதில் ரூ.500 கோடி வரையிலான டெண்டர்களை தொடர்புடைய செயல் இயக்குநர்களை உறுப்பினர்களாகக் கொண்ட குழு இறுதி செய்யும்.
ரூ.500 கோடிக்கு அதிகமுள்ள டெண்டர்களை இறுதி செய்வதற்கு, டெண்டர் குழுவில் ரயில்வே வாரிய உறுப்பினர் கூடுதலாக சேர்க்கப்படு வார். அவரே டெண்டரை இறுதி செய்யும் அதிகாரம் கொண்டவராக இருப்பார்.