

ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் தங்களை இணைத்துக் கொண்டு தற்போது தங்களை அரசியலில் முன்னிலைப்படுத்த துடிக்கும் அர்விந்த் கேஜ்ரிவாலும், கிரண் பேடியும் சந்தர்ப்பவாதிகள் என கங்கிரஸ் முன்னாள் அமைச்சரும், பிரச்சாரக் குழு தலைவருமான அஜய் மக்கான் விமர்சித்துள்ளார்.
மேலும் அவர் கூறும்போது, "ஆம் ஆத்மி தலைவர் அர்விந்த் கேஜ்ரிவாலாக இருக்கட்டும், பாஜக முதல்வர் வேட்பாளர் கிரண் பேடியாக இருக்கட்டும், இருவருமே ஊழலுக்கு எதிரான போராட்டத்தின்மூலம் வெளிச்சத்துக்கு வந்தனர்.
அன்னா ஹசாரேவுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டு தங்களை அடையாளப்படுத்திக் கொண்டனர்.
பின்னர் அன்னா ஹசாரேவை பயன்படுத்திக்கொண்டு தங்களது அரசியல் வேட்கையை நிறைவேற்றிக் கொள்ள துடிக்கின்றனர். இருவருமே சந்தர்ப்பவாதிகள்" என்றார்.
கிரண் பேடி பற்றி கூறும்போது, "அவர் ஒரு சிறந்த போலீஸ் அதிகாரி. ஆனால் அவருக்கு அரசியலுக்கான பொறுமை இல்லை" என தெரிவித்தார்.
கிரண் பேடி, கேஜ்ரிவாலை விமர்சித்த அஜய் மக்கான் அண்மையில் பாஜகவில் இணைந்த காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் கிருஷ்ண தீரத்தையும் விமர்சித்தார். கிருஷ்ண தீரத் முதல் தர சந்தர்ப்பவாதி என கூறினார்.