

ஜப்பானிலிருந்து பிஹாருக்கு சுற்றுலா வந்த ஜப்பான் இளம்பெண்ணை தொடர்ந்து 3 வாரங்களாக அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக சகோதரர்கள் இருவரை போலீஸார் கைது செய்தனர்.
புத்தகயா பகுதிக்கு வந்த 22 வயதுடைய அந்தப் பெண்ணை துப்பாக்கி முனையில் பலவந்தமாக கடத்திய இருவரும் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் அடைத்து வைத்து 3 வாரமாக பலாத்காரம் செய்துள்ளதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
தொடர் பலாத்காரத்தால் உடல்நலம் பாதிக்கப்பட்டு மோசமடையவே டிசம்பர் 20-ம் தேதி கயாவில் உள்ள மாவட்ட தலைமை மருத்துவமனையில் அந்தப் பெண்ணை சேர்த்துள்ளனர்.
இந்நிலையில் அங்கிருந்து தப்பி வாரணாசிக்கு சென்று, அங்கு சுற்றுலா வந்திருந்த சில ஜப்பான் பயணிகள் மூலமாக கொல்கத்தாவில் உள்ள ஜப்பான் தூதரக அதிகாரிகளை தொடர்பு கொண்டு நடந்த சம்பவத்தை அந்த பெண் தெரிவித்ததாக இதுகுறித்து விசாரித்து வரும் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.
இதுதொடர்பாக, சுற்றுலாப் பயணிகளுக்கு வழிகாட்டிகளாக உள்ள சகோதரர்களான பிசாஜித் கான் (32), ஜாவித் கான் ஆகிய இருவரும் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டதாக காவல் துறை துணை கண்காணிப்பாளர் அலோக் குமார் தெரிவித்தார்.
பிஹார் மாநில தலைநகர் பாட்னாவுக்கு தெற்கே 110 கிமீ தொலைவில் புத்த கயா அமைந்துள்ளது. இங்குள்ள பழங்காலத்து புத்த மடாலயங்களைக் கண்டு மகிழ ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிகின்றனர்.
ஜப்பான் பல்கலைக்கழக மாணவியான அந்தப் பெண், கடந்த நவம்பர் மாதம் கொல்கத்தாவுக்கு வந்துள்ளார். பவுத்த கோயில்களை சுற்றிப் பார்ப்பதற்காக அண்மையில் புத்த கயாவுக்கு சென்றுள்ளார் என விசாரணையில் தெரியவந்துள்ளது.