Last Updated : 27 Jan, 2015 02:57 PM

 

Published : 27 Jan 2015 02:57 PM
Last Updated : 27 Jan 2015 02:57 PM

குடியரசு தின விழாவில் இனப் பாகுபாடு: வடகிழக்கு மாநில பெண் வழக்கறிஞருக்கு நேர்ந்த அவலம்

குடியரசு தினவிழா அணிவகுப்பில் கலந்துகொண்டு காணச் சென்ற தன்னிடம் சிலர் இனப் பாகுபாடு காட்டி இடையூறு செய்ததாக வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்த பயிற்சி வழக்கறிஞர் வேதனை தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவர் லியூ நோஷி. கடந்த 12 ஆண்டுகளாக டெல்லியில் வசித்து வருகிறார். தற்போது பயிற்சி வழக்கறிஞராக உள்ளார். இந்த ஆண்டு குடியரசு தினவிழாவில் ராணுவ அணிவகுப்பைக் காண வேண்டும் என்று அனுமதி பெற்று அதில் கலந்துகொண்டார்.

நாட்டின் 66-வது குடியரசு தினவிழாவின்போது மோசமான வானிலை குறுக்கிட்டு இடையூறு செய்ததைப் போல, அணி வகுப்பை காண அமர்ந்திருந்த தன்னிடம் சிலர் இன வேறுபாடு காட்டி இடையூறு செய்ததாக லியூ நோஷி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் 'தி இந்து' (ஆங்கிலம்) நாளிதழிடம் கூறும்போது, "ராஷ்டிரபதி பவனுக்கு எதிரே எனக்கு ஒதுக்கி தரப்பட்ட இருக்கையில் நான் அமர்ந்திருந்தேன். அப்போது என் இருக்கைக்கு அருகே அமர்ந்திருந்த தம்பதி, என்னை நோக்கி விரல் நீட்டி குறிப்பிட்டு ஏதோ பேசிக் கொண்டிருந்தனர்.

ஆனால், நான் அவர்களை கண்டுக்கொள்ளாமல் இருந்துவிட்டேன். சில நிமிடங்களில் பாதுகாப்பு அதிகாரியை அழைத்த அவர்கள், என் கையில் இருந்த கறுப்பு நிற பொருளை பரிசோதிக்க வேண்டும் என்று கூறினர்.

இதனால் கூட்டத்தில் இருந்த அனைவரது பார்வையும் என் மீது திரும்பியது. என்னிடம் வந்த பாதுகாப்பு அதிகாரி சில கேள்விகளை எழுப்பினார். அவர் கேட்ட முதல் கேள்வி, 'நீங்கள் இந்தியரா?', அடுத்தது 'பாதுகாப்பு வளையங்களை தாண்டி தான் உள்ளே நுழைந்தீர்களா?'

இந்த கேள்விகள் என்னை அதிர வைத்தன. நான், நிச்சயமாக முறைப்படிதான் வந்தேன், 5 இடங்களில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டேன் என்று கூறினேன்.

எனது கையில் இருந்த கண்ணாடிப் பெட்டியை அவரிடம் அளித்து சோதனை செய்யும்படி கூறினேன். அப்போது தான் நான் தீவிரவாதி இல்லை என்று அவருக்கு உறுதி செய்ய முடியும் என்று எனக்கு தோன்றியது. என் கண்ணாடிப் பெட்டியை காட்டிய நிலையில், நான் தீவிரவாதி இல்லை என்று அவருக்கு தெரிந்தது.

ஆனால் இந்த பேச்சுவார்த்தைகள் நடந்த 15 நிமிடங்கள் அங்கிருந்த அனைவரது பார்வையும் என் மீது மட்டுமே இருந்தது. காட்சிப் பொருளானேன். அங்கிருந்து எழுந்து மெள்ள நகர்ந்து விட்டேன். கூட்டத்தில் இருந்துகொண்டு பலரது காட்சிப் பொருளாக இருந்து கொண்டு அணிவகுப்பை பார்ப்பதை விட கண்ணீருடன் வெளியேறுவது மேல்" என்றார்.

அமெரிக்க அதிபர் ஒபாமா கலந்துகொள்ளும் குடியரசு தின அணிவகுப்பு சிறப்பு வாய்ந்தது என்று நினைத்தே அங்கு சென்றதாகவும், ஆனால் மெதுவாக அங்கிருந்து நகர்ந்து தனது வீட்டுக்கு வந்து சேர்ந்ததாகவும் லியூ நோஷி வருத்ததுடன் தெரிவித்தார்.

மிகப் பெரிய கூட்டத்துக்கு நடுவே இந்தியாராக இருந்த போயினும் இனப் பாகுபாட்டினால் தான் கேள்விக்குள்ளாக்கப்பட்டதும், பாதுகாப்பு அதிகாரி விசாரணையை முடித்து நகர்ந்து சென்றபோதும் அங்கிருந்தவர்களின் பார்வை நீங்கவில்லை என்று அவர் வேதனையுடன் தெரிவித்தார்.

மேலும், இது தொடர்பாக சட்ட ரீதியில் புகார் அளிக்க அதிகாரம் இருந்தாலும், அதை செய்வதில் எந்த பயனும் இருக்க போவதில்லை என்ற காரணத்தால் அத்தகைய நடவடிக்கையில் தான் ஈடுபட போவதில்லை என்றும் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x