

நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டில் ஊழல் நடந்ததாக தொடரப்பட்டுள்ள வழக்கில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் சிபிஐ விசாரணை நடத்தியதில் மத்திய அரசுக்கு எவ்வித பங்கும் இல்லை என நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் எம்.வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டெல்லியில் நேற்று அவர் கூறியதாவது:
நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு ஊழல் வழக்கில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி உள்ளனர். இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியினர் வெவ்வேறு கருத்துகளைக் கூறி உள்ளனர்.
ஒருவர் இதை நரேந்திர மோடி அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என்று தெரிவித்துள்ளார். மற்றொரு வர் இதை அரசியலாக்கத் தேவை யில்லை என்றும் சட்ட நடைமுறை களின்படி விசாரணை நடைபெற் றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸார் கூறுவது போல இது பழிவாங்கும் நடவடிக்கை இல்லை. சிபிஐ சுதந்திரமாக செயல்படுகிறது. இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு எவ்வித தொடர்பும் இல்லை.
ஊடகங்களுக்கு பேட்டி அளிப்பதற்கு முன்பு என்ன பேச வேண்டும் என்று அவர்கள் (காங்கிரஸார்) கூடி ஆலோசனை நடத்த வேண்டும். தாங்கள் என்ன பேசுகிறோம் என்று தெரியாமலேயே தவறான தகவல்களை பரப்புவதே அவர்களின் பொழுதுபோக்காக உள்ளது.
முறைகேடு நடைபெற்ற காலத்தில் நிலக்கரித் துறைக்கு பொறுப்பு வகித்த மன்மோகன் சிங்கிடம் விசாரணை நடத்தாதது ஏன் என பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி இருந்தனர். நிலக்கரித் துறை முன்னாள் செயலாளரும் இதே கேள்வியை முன்வைத்தார். அத்துறைக்கு பொறுப்பு வகித்தவர் என்பதால் இந்த விவகாரத்தில் என்ன நடந்தது என்பதை தெரிவிக்க வேண்டியது மன்மோகன் சிங்கின் கடமை. இவ்வாறு வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.
நிலக்கரிச் சுரங்க முறைகேடு குறித்த விசாரணை அறிக்கையை சிபிஐ நீதிமன்றத்தில் சிபிஐ அதிகாரிகள் வரும் 27-ம் தேதி தாக்கல் செய்ய உள்ளனர். இந் நிலையில், கடந்த சில தினங் களுக்கு முன்பு மன்மோகன் சிங்கின் வீட்டுக்குச் சென்ற சிபிஐ அதிகாரிகள் அவரது வாக்கு மூலத்தை பதிவு செய்துள்ளனர். ஹிண்டால்கோ நிறுவனத்துக்கு ஒதுக்கப்பட்ட தலபிரா 2 நிலக்கரிச் சுரங்கம் குறித்து அவரிடம் விசாரணை நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.