

ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் முக்கியத் தலைவர்களில் ஒருவரான ஷாஜியா இல்மி மல்லீக், பாஜகவில் இணையவிருப்பதாக கூறப்படுகிறது. இவர், டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் அம்மாநில முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை எதிர்த்து போட்டியிட திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
ஆம் ஆத்மியின் நிறுவனர்களில் ஒருவராகவும் கருதப்படும் ஷாஜியா, அக்கட்சியில் இருந்து கடந்த மே மாதம் விலகினார். ஆம் ஆத்மி கட்சியில் ஜனநாயகம் இல்லாததால் வெளியேறுவதாக அவர் கூறினார். இந்நிலையில் அவர் தற்போது பாஜகவில் சேரவிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து ‘தி இந்து’விடம் பாஜக நிர்வாகிகள் கூறும்போது, “ஆம் ஆத்மியில் இருந்து வெளி யேறியவுடன் ஷாஜியா எங்கள் கட்சியில் சேருவதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் இது தள்ளிப் போனது. இவரை, கேஜ்ரிவாலுக்கு எதிராக நிறுத்த திட்டமிட்டுள்ளோம்” என்றார்.
ஷாஜியா, கடந்த ஆண்டு நடை பெற்ற டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் ஆர்.கே.புரம் தொகுதியில் போட்டியிட்டார். அப்போது அவர் கட்சிக்கு நிதி திரட்டும் பெயரில் பணம் வசூலித்ததாக சர்ச்சையில் சிக்கினார். பாஜக வேட்பாளர் அணில் சர்மாவிடம் ஷாஜியா 326 வாக்குகளில் தோல்வியுற்றார்.
பிறகு மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை எதிர்த்து ரேபரேலி தொகுதியில் ஷாஜியாவை நிறுத்த ஆம் ஆத்மி கட்சி விரும்பியபோது, குடும்பக் காரணங்கள் கூறி அவர் மறுத்து விட்டார். எனினும், காஜியாபாத்தில் பாஜக வேட்பாளர் வி.கே.சிங்கை எதிர்த்து போட்டியிட்டு படுதோல்வி அடைந்தார். அதன்பின் ஆம் ஆத்மியில் இருந்து விலகி இருந்தவரை, பிரதமர் நரேந்திர மோடி தனது தூய்மை இந்தியா பிரச்சாரத்தின் தூதுவராக அறிவித்திருந்தார்.
டெல்லியில் பிப்ரவரி 7-ல் தேர்தல் நடைபெற உள்ளது. இதன் முடிவுகள் பிப்ரவரி 10-ல் வெளியாகும்.