சாரதா நிதி நிறுவன ஊழல் வழக்கில் மம்தாவை கைது செய்தால் மேற்குவங்கம் தீப்பற்றி எரியும்: திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. எச்சரிக்கை

சாரதா நிதி நிறுவன ஊழல் வழக்கில் மம்தாவை கைது செய்தால் மேற்குவங்கம் தீப்பற்றி எரியும்: திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. எச்சரிக்கை
Updated on
1 min read

சாரதா நிதி நிறுவன ஊழல் வழக்கில் முதல்வர் மம்தா பானர்ஜியை கைது செய்தால் மேற்குவங்கம் முழுவதும் தீப்பற்றி எரியும் என திரிணமூல் காங்கிரஸ் கட்சி எம்பி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேற்குவங்க மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பசிரத் தொகுதி எம்.பி. இத்ரிஸ் அலி பேசும்போது, “முதல்வர் மம்தா பானர்ஜியை கைது செய்தால் மேற்குவங்கம் தீப்பற்றி எரியும். அந்தத் தீயில் ஏராளமானவர்கள் எரிக்கப்படுவர். பிரதமர் நரேந்திர மோடியாலும் அந்தத் தீயைக் கட்டுப்படுத்த முடியாது” என்றார்.

இதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதையடுத்து தனது பேச்சை நியாயப்படுத்தும் வகையில் அலி பின்னர் கூறும்போது, “நான் கூறியதில் தவறு ஏதும் இல்லை. அரசியல் ஆதாயத்துக்காக சிபிஐ அமைப்பை தவறாகப் பயன்படுத்த வேண்டாம் என்று பிரதமரையும் பாஜக தலைவர்களையும் கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.

பொதுமக்களின் பல ஆயிரம் கோடி முதலீட்டை மோசடி செய்ததாக சாரதா குழுமம் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கில் மாநில அமைச்சர் மதன் மித்ரா, 2 எம்.பி.க்கள், சிறிஞ்சய் போஸ் குணால் கோஷ் உள்ளிட்ட திரிணமூல் காங்கிரஸ் கட்சியினரை சிபிஐ கைது செய்துள்ளது.

இதற்கிடையே, இந்த ஊழலில் மம்தா அதிகம் பயனடைந்ததாகவும் அவரை கைது செய்யாவிட்டால் தற்கொலை செய்துகொள்வேன் என்றும் குணால் கோஷ் கைது செய்யப்பட்டபோது கூறியிருந்தார். அதன்படி அவர் சிறையில் அதிக தூக்க மாத்திரைகளை சாப்பிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in