Published : 22 Jan 2015 10:09 AM
Last Updated : 22 Jan 2015 10:09 AM

மவுலிவாக்கம் கட்டிட விபத்தால் சேதம்: அருகிலுள்ள வீட்டுக்கு நஷ்டஈடு கோரி வழக்கு - பதில் அளிக்க அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

மவுலிவாக்கம் 11 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில், அருகிலுள்ள வீடு முற்றிலுமாக சேதமடைந்ததால் அதற்கு நஷ்டஈடு வழங்க உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கில், 8 வாரங்களுக்குள் பதில் அளிக்க அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதுதொடர்பாக சென்னையைச் சேர்ந்த எஸ்.எம். டேனியல் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

நான் மவுலிவாக்கம் ராஜராஜன் நகரில் ரூ.40 லட்சத்துக்கு வீடு வாங்கி, அங்கு குடும்பத்துடன் வசித்து வந்தேன். வீட்டுக்காக தனியார் வங்கியில் சுமார் ரூ.30 லட்சம் கடன் வாங்கினேன். மாத தவணையாக ரூ.36,398 செலுத்தி வந்தேன். இந்நிலையில், கடந்தாண்டு ஜூன் 28-ம் தேதி மவுலிவாக்கத்தில் 11 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில், என் வீடும், அருகிலுள்ள சில வீடுகளும் சேதமடைந்தன. எனது வீடு முற்றிலுமாக சேதமடைந்தது. வீட்டின் ஒருபகுதியையாவது சீரமைத்து குடியேறலாம் என அதற்கான முயற்சியில் ஈடுபட்டேன். ஆனால், அந்தப் பகுதி குடியிருப்பதற்கு லாயக்கற்ற பகுதி என்று சொல்லி, என்னையும், அருகிலிருந்த வீட்டினரையும் அதிகாரிகள் அனுப்பிவிட்டனர். இதையடுத்து பரங்கிமலையில் மாத வாடகை ரூ.15 ஆயிரத்துக்கு வீடு எடுத்து தங்கினேன். இதற்கிடையே நான் வேலை பார்த்த நிறுவனம் தற்காலிகமாக மூடப்பட்டதால், வேலை இழந்தேன். இப்போது வேலை தேடிக் கொண்டிருக்கிறேன்.

வீடு சேதமடைந்ததால் எனக்கு ஏற்பட்ட இழப்புக்கு நஷ்டஈடு கோரி அரசுக்கு மனு கொடுத்தேன். இந்த விபத்து குறித்து விசாரிப்பதற்காக நியமிக்கப்பட ஒரு நபர் கமிஷன் மூலமாகவும் எனக்கு நிவாரணம் கிடைக்கவில்லை. 11 மாடி கட்டிடம் எனது வீட்டின் மீது விழுந்து சேதமடைந்ததால், காப்பீட்டு நிறுவனத்திடம் இழப்பீட்டுத் தொகையைப் பெற முயற்சிக்காமல் தனியார் வங்கியும் என்னிடம் பணத்தைச் செலுத்துமாறு நெருக்கடி கொடுத்து வருகிறது. வீட்டுக் கடனுக்கு மாதத் தவணை கட்ட முடியாமலும், குடும்பம் நடத்த போதிய வருமானம் இல்லாததாலும் பெரிதும் சிரமப்படுகிறேன். எனவே, சேதமடைந்த வீட்டுக்கு நஷ்டஈடு கோரி அரசுக்கு நான் கடந்த மாதம் 12-ம் தேதி கொடுத்த மனுவைப் பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்ற நீதிபதி டி.எஸ்.சிவஞானம் இந்த மனுவை நேற்று விசாரித்து, மனுதாரர் மனு மீது 8 வாரத்துக்குள் பதில் அளிக்க அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x