Published : 10 Jan 2015 15:36 pm

Updated : 10 Jan 2015 17:44 pm

 

Published : 10 Jan 2015 03:36 PM
Last Updated : 10 Jan 2015 05:44 PM

ஆடு, மாடு, கோழி இருந்தால் மாதம் ரூ. 30 ஆயிரம் வருமானம்

30

இரண்டரை ஏக்கர் நிலம், நாட்டு மாடு இரண்டு, வெள்ளாடு ஐந்து, நாட்டுக் கோழி நூறு ஆகியவற்றுடன் உழைப்பை மூலதனமாகக்கொண்டு மாதம் அறுபதாயிரம் ரூபாய் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார் விவசாயி கணேசன்.

ஒரத்தநாடு அருகிலுள்ள சோழகன்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன். ஆறாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த போதே, அவருடைய அப்பா இறந்துவிட்டதால் படிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு நிலத்தில் இறங்கினார். தொடக்கத்தில் ரசாயன உரங்களைப் போட்டுத்தான் அவரும் விவசாயம் பார்த்தார். ஆனால், கடந்த 12 வருடங்களாக இவரது நிலத்தில் ஒரு துளி ரசாயன உரம்கூட விழவில்லை; முழுக்க முழுக்க இயற்கை வேளாண்மைதான்.

ஏன் இயற்கை விவசாயம்?

அது எப்படிச் சாத்தியமானது? விளக்குகிறார் கணேசன். “வயல்களில் பூச்சிக்கொல்லி அடிக்குறப்ப புழு - பூச்சிக செத்து மடியுறத கண்ணால பார்த்திருக்கேன். பூச்சி மருந்து அடிச்சுட்டு வந்து ராத்திரி படுத்தோம்னா உடம்பு தீயா எரியும். பொணம் மாதிரித்தான் கெடப்பேன். ஒரு கட்டத்துல, ஏன் இப்படி மருத்தைக் கொட்டி மண்ணை நஞ்சாக்கணும்னு யோசிச்சேன். அப்பலருந்து ரசாயன உரங்களைத் தொடுறதில்லை.

எவ்வளவு விளைஞ்சாலும் பரவாயில்லை, ரசாயன உரம் போடக் கூடாதுன்னு தீர்மானிச்சுட்டேன். ரெண்டு மூணு வருசம் கஷ்டமாத்தான் இருந்துச்சு. போகப்போக மண் துளிர்த்திருச்சு. ஆடு, மாடு, கோழி சார்ந்த இயற்கை சூழலில் நாமளும் தோட்டத்துக்குள்ளேயே குடியிருக்கணும். அப்பத்தான் உண்மையான மகசூலைப் பார்க்க முடியும்.

பயிரும் உயிரும்

என்கிட்ட ரெண்டு பசுமாடு, அஞ்சு வெள்ளாடு, நூறு நாட்டுக் கோழி இருக்கு. இதுகளோட திட, திரவக் கழிவுகளைச் சேமிக்கிறதுக்காக இயற்கை உரக் குழி வச்சிருக்கேன். காலையில மாட்டுக் கொட்டடியைக் கழுவிவிட்டா கழிவு எல்லாம் அந்தக் குழிக்குள்ள போயிரும். தோட்டத்துக்குப் போற தண்ணிய இந்தக் குழிக்குள்ளவிட்டு அங்க இருந்துதான் செடிகளுக்குத் தண்ணி பாயும்.

கொடிக் காய்கள் அஞ்சு, செடிக் காய்கள் அஞ்சு இது மட்டும்தான் நான் போட்டிருக்கேன். விதை நடுவேன், தண்ணீர் பாய்ச்சுவேன், களை பறிப்பேன், காய் பறிப்பேன். இதைத் தவிர வேறெதுவும் செய்றதில்லை. நூறு கிலோ காய் எடுத்தோம்னா, அதுல 25 கிலோவுக்குப் பூச்சி இருக்கத்தான் செய்யும். இதுக்காக நான் கவலைப்படுறதில்லை. பூச்சிக் காய்களை அப்படியே ஆடு - மாடுகளுக்குத் தீனியா போட்டுருவேன்.

நஞ்சில்லா உணவு

தோட்டத்துல மா, எலுமிச்சை, ஆரஞ்சு மரங்களும் இருக்கு. இந்த மரங்கள்ல இருக்கிற பெரிய வகை எறும்புகள் அப்படியே வயலுக்குள்ள வந்து பூச்சிகளை ஓரளவுக்குத் தின்னு அழிச்சிரும். காய் - கனிகள் காய்ச்சு முடிஞ்சா அதன் செடி - கொடிகள் மட்டுமே ஆண்டுக்கு 20 டன் வரைக்கும்வரும், அதையும் அப்படியே தோட்டத்துக்குள்ள உரமா புதைச்சிருவேன்.

நம்ம மட்டும் உரம் போடாம இருந்து, பக்கத்துத் தோட்டங்கள்ள உரம் போட்டுருந்தா மழை தண்ணியில அந்த உரங்கள் நம்ம தோட்டத்துக்கும் வந்துரும். அதனால அக்கம்பக்கம், அடுத்த ஊர், பக்கத்து ஊர் விவசாயிகளை எல்லாம் இயற்கை விவசாயத்துக்கு மாத்தினேன். இப்படிச் சேர்ந்த சுமார் 250 விவசாயிகளைக் கொண்டு ‘தமிழ்நாடு நஞ்சில்லா உணவு உற்பத்தி மற்றும் விற்பனை மைய'த்தை 2012-ல ஆரம்பிச்சோம்.

எல்லாமே இயற்கை

இந்த அமைப்பில் உள்ளவர்கள் காய், கனிகள் மட்டுமின்றி நெல், மீன் வளர்ப்பு, விவசாயம் உள்ளிட்டவற்றை இயற்கை முறையில் மேற்கொள்கிறார்கள். நாங்க உற்பத்தி செஞ்ச பொருட்களுக்கு ஒவ்வொரு வருசமும் சித்திரை முதல் தேதில விலை நிர்ணயம் செய்வோம். அந்தச் சமயம் தக்காளி கிலோ 25 ரூபாய்னு நிர்ணயம் செஞ்சா, ஒரு வருசத்துக்கு அதுதான் விலை. தக்காளி விலை 70 ரூபாய்க்குப் போனாலும் 2 ரூபாய்க்குப் போனாலும் எங்களிடம் 25 ரூபாய்தான் விலை.

இதன் மூலம் நுகர்வோருக்கு மட்டுமில்லாம விவசாயிகளுக்கும் பாதிப்பு வராத வகைல பாத்துகிறோம். என் மனைவி ரேவதி 10-ம் வகுப்புத்தான் படிச்சிருக்கார். கணவர் நிறுவனத்துல உத்தியோகம் பார்க்கலியேங்கிற ஆதங்கம் அவருக்கு முதல்ல இருந்துச்சு. இப்போ எனக்கு வரும் பாராட்டுகளையும் தொலைபேசி அழைப்புகளையும் பார்த்துட்டு அவரும் பூரிச்சுப் போயிருக்கார்.

நாட்டு மாடு ரெண்டு, வெள்ளாடு அஞ்சு, நாட்டுக் கோழி இருபது இருந்தாபோதும் ஒரு ஏக்கரில் மாதம் முப்பதாயிரம் ரூபாய்க்குக் குறையாமல் சம்பாதிக்கலாம். யாரு கையையும் எதிர்பார்த்துட்டு உக்காந்துருக்க வேண்டியதில்லை” என்று அனுபவத்தை அழகாய்ச் சொல்கிறார் கணேசன்.

கணேசனைத் தொடர்பு கொள்ள: 9626695141

இயற்கை விவசாயம்விவசாயி கணேசன்ஆடு மாடு வளர்ப்புஇயற்கை வேளாண்மைரசாயன உரம்

You May Like

More From This Category

More From this Author