

பீகார், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த 250 குழந்தைத் தொழிலாளர்களை ஐதராபாத் போலீஸார் மீட்டுள்ளனர். குழந்தைகளை பணியில் அமர்த்திய வணிகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஐதராபாத்தின் தெற்கு பகுதிகளில் இன்று (சனிக்கிழமை) அதிகாலை தேடுதல் வேட்டையில் இறங்கிய அந்நகர போலீஸார் அங்கு கூலி வேலைகளை செய்ய தங்கி இருந்த 250 குழந்தைத் தொழிலாளர்களை மீட்டனர்.
இது குறித்து பேசிய போலீஸார், "தலாப்கட்டா, ஹுஸைனில்லம், பவானி நகர் ஆகிய பகுதிகளில் குழந்தைகளை பணியில் அமர்த்தியுள்ள வணிகர்கள், குழந்தைகளின் பெற்றோருக்கு மிக சொற்பக் கூலியை அளித்துவிட்டு வேலை வாங்கி வந்துள்ளனர். குழந்தைகளை அவர்கள் மிக மோசமான சூழலில் தங்கவைத்திருந்தனர்" என்றார்.
குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்திய 8 வணிக முதலாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த தேடல் வேட்டை அதிகாலை 2.30 மணியிலிருந்து 5.30 மணி வரை நடந்தது. மீட்கப்பட்ட குழந்தைகள் அனைவரும் பீகார், உத்தரப் பிரதேசம், ஒடிசா என பல மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
மீட்கப்பட்ட குழந்தைகள் அனைவரும் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டனர்.