Published : 08 Jan 2015 12:03 PM
Last Updated : 08 Jan 2015 12:03 PM

இணையதளம் மூலம் பள்ளி மாணவர்களுக்கு திருவள்ளுவர் குறித்து தேசிய கட்டுரைப் போட்டி: மத்திய அமைச்சகம் அறிவிப்பு

பள்ளி மாணவர்களுக்கு திருவள்ளுவர் குறித்த தேசிய அளவிலான கட்டுரைப் போட்டி இணையதளம் மூலம் நடத்தப்படும் என மத்திய மனிதவளத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி அறிவித்துள்ளார்.

திருவள்ளுவர் குறித்த தகவல்கள் தொகுக்கப்பட்டு, புதிய கல்விக் கொள்கை பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த பாஜக எம்.பி. தருண், திருவள்ளுவர் குறித்த தகவல்கள், படங்கள் அடங்கிய 50 பக்க சிறிய நூலைத் தொகுத்துள்ளார். இந்நூலை மத்திய மனித வளத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி நேற்று வெளியிட்டார்.

அப்போது ஸ்மிருதி இரானி கூறியதாவது: திருவள்ளுவர் பற்றி மற்ற மாநிலங்களும் அறிந்து கொள்ளும் வகையில் இந்த மாதம் இணையதளம் வழியாக பள்ளி மாணவர்களுக்கான கட்டுரை போட்டி நடத்தப்படும். மனித வள அமைச்சகம் நடத்தும் இப்போட்டியில் 22 மொழிகளில் மாணவர்கள் கட்டுரைகளைச் சமர்ப்பிக்கலாம். இதன் மூலம், திருக்குறளில் உள்ள நல்ல விஷயங்களை பலரும் அறிந்து கொள்வர். கடந்த மாதம் மகாகவி சுப்பிரமணிய பாரதியார் குறித்த கட்டுரைப் போட்டி நடத்தப்பட்டது. இதில், அனைத்து மாநிலங்களில் இருந்தும் பல மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டார்கள். அசாமில் இருந்து அம்மாநில மொழியிலும் ஒரு கட்டுரை வந்திருக்கிறது. மத்திய அரசு கல்வி பாடத்திட்டங்களை மாற்றி அமைத்து புதிய கல்விக்கொள்கையை அறிவிக்க உள்ளது. இதில், வள்ளுவர் பற்றி மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் பாடத்திட்டங்கள் அமைக்கப்படும்” என்றார்.

தேசிய ஒருமைப்பாட்டை வளர்க்கும் வகையில் திருவள்ளுவர் பற்றிய விழிப்புணர்வை வட இந்தியாவில் ஏற்படுத்தி வரும் தருண் விஜயையும், ஸ்மிருதி பாராட்டினார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x