சுரங்க ஊழல் வழக்கு: ஜனார்த்தன ரெட்டிக்கு நிபந்தனை ஜாமீன்- 4 ஆண்டுகளுக்குப் பின் விடுதலையாகிறார்

சுரங்க ஊழல் வழக்கு: ஜனார்த்தன ரெட்டிக்கு நிபந்தனை ஜாமீன்- 4 ஆண்டுகளுக்குப் பின் விடுதலையாகிறார்
Updated on
1 min read

சட்டவிரோத சுரங்க ஊழல் வழக்கில் கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டிக்கு உச்ச நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.

ஜனார்த்தன ரெட்டி தனது சொந்த ஊரான‌ பெல்லாரியில் மட்டுமின்றி ஆந்திராவிலும் சுரங்கத் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இவரது ஓபுலாபுரம் சுரங்க நிறுவனம் சட்டவிரோதமாக கனிம வளங்களை கொள்ளையடிப்பதாக சிபிஐ போலீஸார் வழக்கு தொடர்ந்தனர்.கடந்த‌ 2011-ம் ஆண்டு செப்டம்பர் 5-ம்தேதி ஜனார்த்தன ரெட்டி கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து அவர் மீது கர்நாடகத்தில் 6 வழக்குகளும், ஆந்திராவில் 2 வழக்குகளும் சிபிஐ அதிகாரிகள் தொடர்ந்தனர். இது தவிர தனது வழக்கை விசாரிக்கும் நீதிபதிக்கு லஞ்சம் தர முயன்றதாகவும் அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இதில் 5 வழக்குகளில் அவ‌ருக்கு ஜாமீன் கிடைத்தது.

ஆனால் ஓபுலாபுரம் சுரங்க நிறுவனம் உட்பட 4 வ‌ழக்குகளில் சிபிஐ நீதிமன்றம் அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது.

இந்நிலையில் இது தொடர்பான மேல்முறையீட்டு மனு உச்ச‌ நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்து, நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அருண் மிஸ்ரா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ ஆட்சேபம் தெரிவிக்காததால் ஜனார்த்தன ரெட்டிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

சிறை நடைமுறைகள் முடிந்து ஜனார்த்தன ரெட்டி வெள்ளிக்கிழமை அல்லது சனிக்கிழமை விடுதலை ஆவார் என்று தெரிகிறது. சுமார் 4 ஆண்டுகளுக்கு பிறகு பெங்களூரு சிறையில் இருந்து அவர் விடுதலை யாவதால் ஆதரவாளர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in