

கேரளாவில் கல்வியாளர்கள் பங்கேற்ற “இஸ்லாமியத்தில் அழகியல் கருத்தாக்கங்கள்” என்ற தலைப்பில் 2 நாள் கருத்தரங்கு நடைபெற்றது.
நேற்று (ஞாயிறு) முடிவடைந்த இந்தக் கருத்தரங்கில், "தீவிரவாத மற்றும் அடிப்படைவாத சிந்தனைகள், இஸ்லாம் முன்வைக்கும் அழகியல் கருத்தாக்கங்களை சிதைத்து விடுகிறது” என்று கூறப்பட்டது.
இதிஹாது ஷுபனில் முஜஹிதீன் அமைப்பு கேரள மாநிலத்தின் மலப்புரத்தில் இந்த 2 நாள் கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்திருந்தது.
இஸ்லாம் போதிக்கும் அழகியல் கருத்தாக்கங்களை எதிர்மறையாக விளக்கம் அளித்துப் புரிந்து கொள்ளுதல் ஆபத்தானது என்று கல்வியியலாளர்கள் பல்வேறு உரைகளில் தெரிவித்தனர்.
“இஸ்லாமியத்தின் அழகியல் கருத்தாக்கங்கள் பற்றி எதிர்மறைப் பிரச்சாரம் மேற்கொள்பவர்கள் சமூகத்திற்கு தீமையையே விளைவிக்கின்றனர்” என்று இந்தக் கருத்தரங்கில் கருத்துகள் முன்வைக்கப்பட்டன.
இஸ்லாம் ஒரு போதும் அழகு மற்றும் கலை ஆகியவற்றுக்கு எதிராக பேசியதில்லை என்று கல்வியாளர்கள் கருத்து தெரிவித்தனர்.
கேரள நகர்ப்புற விவகார அமைச்சர் மஞ்சளம்குழி அலி, இந்தக் கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் கலை மற்றும் மனிதநேயவாதம் ஆகியவை சமூகத்திற்கு அளிக்கும் பங்களிப்பின் முக்கியத்துவம் பற்றி பேசினார்.
இந்தக் கருத்தரங்கில் ஜமீல் அகமது, முஜீப் ரஹ்மான் கினலூர், பாலகிருஷ்ணன் வள்ளிக்கண்ணு உள்ளிட்ட கல்விப்புல ஆய்வாளர்கள் கலந்து கொண்டு சொற்பொழிவு ஆற்றினர்.
மாணவர்கள், கல்லூரி பேராசிரியர்கள் என்று பலரும் இந்த கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.