

லோக்பால், மத்திய ஊழல் கண் காணிப்பு ஆணையர் (சிவிசி) மற்றும் தலைமை தகவல் ஆணையர் (சிஐசி) ஆகிய பதவிகளுக்கான நியமன விவகாரத்தில் வேண்டுமென்றே காலதாமதம் செய்யவில்லை என்றும் உரிய நேரத்தில் நியமனம் நடைபெறும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய பணியாளர் நலத் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
சிபிஐ அமைப்பு அதற்கென உள்ள விதிமுறைகளின்படி செயல்பட்டு வருகிறது. சுதந்திரமாகவும் சுமுகமாகவும் செயல்படுவதை உறுதி செய்வதற்காக அந்த அமைப்பை வலுப்படுத்த அரசு உறுதி பூண்டுள்ளது.
லோக்பால் சட்டத்தை வெளிப்படைத்தன்மையுடன், திறம்பட செயல்படுத்துவதற்கு ஏதுவாக அதில் சில திருத்தங்களை செய்ய அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பான மசோதா நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டது. அப்போது, நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும் என சில உறுப்பினர்கள் கோரினர்.
இதையடுத்து நிலைக்குழு வுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அதன் பரிசீலனையில் உள்ளது. முடிந்தால் அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இந்த சட்டத் திருத்தம் நிறைவேற்றப்படும். அதன்பிறகு லோக்பால் அமைப் பின் தலைவர் மற்றும் உறுப் பினர்கள் நியமிக்கப்படுவார்கள்.
மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர் மற்றும் தலைமை தகவல் ஆணையர் நியமன விவ காரத்தில் அரசு வேண்டுமென்றே காலதாமதம் செய்வதாக குற்றச் சாட்டு எழுந்துள்ளது. ஆனால் இந்த குற்றச்சாட்டு தவறானது.
சிவிசி, சிஐசி நியமனம் குறித்து உச்ச நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பது உத்தரவு. இதனால் காலதாமதம் ஆகிறது. எனினும் புதிய நியமனம் தொடர்பான பணிகள் ஏற்கெனவே தொடங்கி உள்ளன. உரிய நேரத்தில் நியமனம் நடைபெறும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சிவிசி மற்றும் சிஐசி ஆகிய பதவிகள் கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக காலியாக உள்ளன. அதாவது மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையராக இருந்த பிரதீப் குமார் கடந்த ஆண்டு செப்டம்பர் 28-ம் தேதி ஓய்வு பெற்றார். இதையடுத்து, சிவிசி-யின் கீழ் பணிபுரியும் 2 ஆணையர்களில் ஒருவரான ராஜீவ் இடைக்கால தலைவராக உள்ளார். மற்றொரு ஆணையர் பதவியும் காலியாக உள்ளது. இது போல தலைமை தகவல் ஆணைய ராக இருந்த ராஜீவ் மாத்தூர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 22-ம் தேதி ஓய்வு பெற்றார்.